சென்னை: வடபழனி பகுதியில் வசித்துவருபவர் சீனிவாசன் (29). இவர் எந்திரன் 2.0, பேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்துள்ளார். பகுதி நேரமாக திருமண நிகழ்ச்சிகளை யூ-ட்யூப் மூலம் நேரடி ஒளிபரப்பும் பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில், இவருக்கு செல்போனில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் அமேசான் நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும், நாளொன்றுக்கு எட்டாயிரம் வரை சம்பாதிக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தது. அந்தக் குறுஞ்செய்தியில் தொடர்புக்கு ஒரு எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது.
அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
இதை நம்பிய சீனிவாசன் அந்த எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டுள்ளார். அதில், அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும் அதற்கான நடைமுறைகளைப் பின்தொடர கீழ்க்கண்ட வலைதளத்திற்குச் சென்றால் வீட்டில் இருந்தபடியே தினமும் பணம் சம்பாதிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அந்த வலைதளத்திற்குச் சென்று அந்தப் பக்கத்திற்குள் செல்ல அதில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் மீது முதலீடு செய்தால் சிறிது நேரத்தில் முதலீடு செய்த தொகையைவிட அதிக தொகை உங்கள் வங்கிக் கணக்குக்கு வரும் எனத் தெரிவித்திருந்தனர்.
அதனை நம்பி ஸ்ரீனிவாசன் முதலில் ஒரு பொருளின் மீது 500 ரூபாய் முதலீடு செய்ய சிறிது நேரத்தில் 850 ரூபாய் அவரது வங்கிக் கணக்குக்கு வந்துள்ளது. பின்னர், மீண்டும் பரிசோதிக்க ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய சிறிது நேரத்தில் 1500 ரூபாய் வங்கிக் கணக்குக்கு வந்துள்ளது. உடனே மகிழ்ச்சியடைந்த சீனிவாசன் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டும் எனக் கருதி நான்காயிரம் ரூபாயை முதலீடு செய்துள்ளார்.
முதலீடு செய்த நபர்
அதற்கு ஒன்பதாயிரம் கிடைக்கும் எனக் குறிப்பிட்டிருந்ததால் பணத்தைச் செலுத்தியுள்ளார். ஆனால், சொன்னபடி ஒன்பதாயிரம் திருப்பி கிடைக்கவில்லை. அவருக்கு வந்த தகவலின்படி மேலும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்தால் ஒட்டுமொத்தமாக முதலீடும், லாபமும் சேர்ந்தாற்போல் கிடைக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. அதனை நம்பி பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்ய அதற்கும் இவருக்குத் தொகை திருப்பி கிடைக்கவில்லை.
இது தொடர்பாக பேட்டியளித்த பாதிக்கப்பட்ட சீனிவாசனின் நண்பர் மனோகர், 500 ரூபாய்க்கு ஒரு பொருளில் முதலீடு செய்து வாங்கி அமேசானிடம் கொடுத்தால், அந்தப் பொருளை அதிக விலை வைத்து அமேசான் வலைதளம் மூலம் விற்பனை செய்துதருவார்கள். முதலில் லாபத்தை தனது நண்பரின் வங்கிக் கணக்கிற்குச் செலுத்தியதை நம்பியே அவர் பெரிய தொகைகளை முதலீடு செய்துள்ளார்.
மேலும், அவருக்குப் பணம் திருப்பிக் கிடைக்காததால் அது குறித்து அமேசான் நிறுவனம் எனக் கூறியவர்களிடம் பேசியபோது, இதில் எட்டு விதமான நிலை உள்ளதாகவும், ஒவ்வொரு நிலையில் உள்ள பொருள்களிலும் முதலீடு செய்து, எட்டாம் நிலை வரை உள்ள பொருள்களில் முதலீடு செய்தால் மட்டுமே முதலீடு செய்த தொகையோடு முழு லாபம் கிடைக்கும் என டெலிகிராம் செயலி மூலமாகத் தனது நண்பருக்கு குறுஞ்செய்தி வந்ததாகவும் தெரிவித்ததார்.
அமேசான் நிறுவனத்தின் பெயரில் மோசடி
கட்டிய பணத்தை அப்படியே விட்டுவிடவும் மனமில்லாமல், எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தன் கையில் இருந்த பணம், நண்பரிடமிருந்து வாங்கிய பணம் என ஏழு முறை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயைச் செலுத்திய சீனிவாசனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. லாபத்தை மட்டுமல்ல அவர் செலுத்திய 97 ஆயிரத்து 500 ரூபாய் முதலீட்டுத் தொகையில் ஒரு ரூபாய்கூட திருப்பி கிடைக்கவில்லை என்பதே வேதனையின் உச்சம்.
அதன் பிறகு சீனிவாசன் தனது நண்பர்களிடம் விவரத்தைச் சொன்னபோதுதான் இது ஒரு மோசடி குறுஞ்செய்தி எனவும், அமேசான் நிறுவனத்தின் பெயரில் இந்த மோசடி செய்யப்படுவதை உணர்ந்துள்ளார் சீனிவாசன். இதையடுத்து பணத்தை இழந்த சீனிவாசன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் புகார் என்பதால் தியாகராய நகர் காவல் மாவட்ட சைபர் பிரிவுக்கு இந்தப் புகாரானது விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
பட்டதாரிகளைக் குறிவைத்து மோசடி
இது குறித்து கூறிய சைபர் கிரைம் காவல் துறையினர், ”படித்து முடித்துவிட்டு பல்வேறு இணையதளங்கள், வலைதளங்கள் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கும் பட்டதாரிகளைக் குறிவைத்து அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற பிரபல நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்தி இது போன்ற மோசடி நடைபெறுகிறது.
இதுவரை 10-க்கும் மேற்பட்ட புகார்கள் இதே பாணியில் பணம் இழந்தவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த கூறும் எந்த நிறுவனங்களையும் நம்பி ஏமாற வேண்டாம்” எனக் காவல் துறை சார்பில் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உத்தரவு