சென்னை: சமீப காலமாக பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது டெலிகிராம் என்ற சமூக வலைதளம் மூலமாக மோசடிகள் அதிகரித்து வருகின்றன. வாட்ஸ்அப்புக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட இந்த டெலிகிராம் மூலமாக பல்வேறு நூதன மோசடிகள் தொடர்பாக புகார்கள் வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்களை பொது இடங்களில் செல்லும் போது ஆபாசமாக புகைப்படம் எடுத்து விற்பனை செய்யும் டெலிகிராம் கும்பலைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது பகுதி நேர வேலை எனக் கூறி கூகுளில் வரும் நட்சத்திர விடுதிகளுக்கு லைக்குகள் மற்றும் நல்ல ரிவியூகள் பதிவு செய்தால் பணம் கொடுப்பதாக கூறி நூதன முறையில் மோசடியை ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக நெற்குன்றத்தைச் சேர்ந்த தீபிகா என்ற ஐடி ஊழியர் செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் கூகுளில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு லைக் மற்றும் ரிவ்யூகள் கொடுத்தால் பணம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.இந்த வேலை செய்வதற்கு குறிப்பிட்ட டெலிகிராம் குரூப்பில் இணையுமாறு தெரிவித்துள்ளார். அவ்வாறு இணைந்த தீபிகாவிற்கு, தனியாக யூசர் ஐடி, பாஸ்வேர்டுகள் உருவாக்கி ஆன்லைனில் நிறுவனத்தில் உறுப்பினராக தெரிவித்துள்ளனர். மேலும் சம்பாதிக்கும் பணத்தை போடுவதற்கு வங்கிக் கணக்கையும் இணைக்குமாறு தெரிவித்துள்ளனர்.
ஆன்லைனில் இந்த தொழில்நுட்பங்களை நம்பி உண்மையாக பகுதி நேர வேலை என நினைத்து பணம் செலுத்தி சம்பாதிக்கலாம் என நினைத்ததாக தெரிவித்துள்ளார். பல்வேறு டாஸ்குளை கொடுத்துள்ளனர். அதை செய்து முடித்தவுடன் 150 ரூபாய் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இதே போன்று ப்ரீபெய்டு டாஸ்குகள் இருப்பதாகவும், அதற்கு பணம் செலுத்தினால் அதிக அளவு நட்சத்திர விடுதிகளுக்கு லைக் மற்றும் ரிவ்யூ செய்வதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை காட்டியதாக கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி ஹோட்டல்களுக்கு ரிவீவ் செய்ததன் மூலம் 1300 ரூபாய் வங்கி கணக்கிற்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக 3000, 5000, 25,000, 50,000 என படிப்படியாக மூன்று லட்சத்து 74 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தை ப்ரீபெய்டு டாஸ்க்காக கொடுத்துள்ளார். பணம் அதிகம் செலுத்த அதிகளவு லாபம் தனது வங்கிக் கணக்கிற்கு வந்ததை அடுத்து அதிகளவு பணத்தை செலுத்தி டாஸ்குகள் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் டாஸ்கை முடித்ததற்கான பணத்தை தனது வங்கிக் கணக்கிற்கு திரும்ப பெறுவதற்கு குறிப்பிட்ட அளவு தொகை செலுத்த வேண்டும் எனக் கூறி ஆசை வார்த்தை காட்டி பணத்தை மோசடி செய்துள்ளதாக தீபிகா புகாரில் தெரிவித்துள்ளார். ஆன்லைன் மூலமாக இதுபோன்று பகுதி நேர வேலை எனக் கூறி மோசடி செய்த கும்பல் குறித்து அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீபிகா இணைந்துள்ள டெலிகிராம் குரூப்பின் அட்மின் மற்றும் இதேபோன்று ஆன்லைன் பகுதி நேர வேலைக்கு சேர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை சேர்த்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மணிப்பூர் கலவரம்; தமிழ்நாட்டில் தொடரும் பதற்றம்.. மெரினாவில் போலீசார் குவிப்பு!