சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் சிலர் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் சுங்கத்துறையினர் இன்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். அப்போது மலேசியாவில் இருந்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (26) மற்றும் இப்ராகிம் ஷா (29) ஆகியோரை மறித்து விசாரணை நடத்தினர்.
இரண்டு பேரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவர்களுடைய உடமைகளை சோதனை செய்தனர். அதில் பயன்படுத்தப்பட்ட மூன்று மடிக்கணினிகள் இருந்தன. பின்னர் அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் தங்கம் மறைத்து வைத்திருப்பதை அலுவலர்கள் கண்டறிந்தனர். தொடர்ந்து இரண்டு பேரிடமுமிருந்து ரூ.17 லட்சத்து 36 ஆயிரம் மதிப்புள்ள 446 கிராம் தங்கமும், ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினிகளும் கைப்பற்றப்பட்டன.
இதேபோன்று துபாயில் இருந்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த பஷீர் அகமது (40), ஷேக் தாவூத் (50) ஆகியோரின் உடமைகளை சோதனை செய்தபோது ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினிகள் மற்றும் ரூ.56 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மேலும், உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள 642 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.
வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வந்த 4 பேரிடம் இருந்து ரூ.42 லட்சத்து 36 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 88 கிராம் அளவிலான தங்கமும், ரூ.56 ஆயிரம் மதிப்புள்ள சிக்ரெட்டுகள், ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.