சென்னை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகாவைச் சேர்ந்தவர் ஜெகன் (25). இவர் அம்பத்தூர் புதூர் அருகே அமைந்துள்ள மதுபானக் கூடத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி இரவு பணியிலிருந்த ஜெகனுக்கும், அங்கு மதுபானத்தை வாங்க வந்திருந்த அம்பத்தூர் ஒரகடத்தைச் சேர்ந்த அஜித்குமார் (27), அவரது நண்பர்களான புதூரைச் சேர்ந்த விமல் ராஜ் என்கிற அப்பு (28), எம்கேபி நகரைச் சேர்ந்த கணேஷ் என்கிற சில்லறை கணேஷ் (25), ஒரகடத்தைச் சேர்ந்த சரண்குமார் (26) ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது.
இதனையடுத்து நால்வரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டனர். இருப்பினும் ஆத்திரம் தீராத 4 பேரும் பெரிய அளவிலான பட்டாக்கத்தியை எடுத்துக் கொண்டு, ஜெகனை கொலை செய்வதற்காக மீண்டும் அந்த மதுபானக் கூடத்தின் வாசலில் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்துள்ளனர்.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் தனிப்படை போலீசார், மதுபானக் கூடத்தை ரகசியமாக நோட்டமிட்ட நிலையில், கத்தியுடன் காத்துக் கொண்டிருந்த 4 பேரையும் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் தாங்கள் வந்திருந்த இருசக்கர வாகனங்களில் ஏறி தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.
அப்போது, அம்பத்தூர் தனிப்படை போலீசார் அவர்களை விடாமல் பின் தொடர்ந்து சென்ற நிலையில், அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதால் நிலைதடுமாறிய அவர்கள், நடுரோட்டிலேயே விழுந்துள்ளனர். இதில் அஜித் குமார், விமல் ராஜ், சில்லறை கணேஷ் மூவருக்கும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் மூவரையும் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு, உடைந்த கைகளில் மாவு கட்டும் போடப்பட்டுள்ளது. பின்னர், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், 4 பேர் மீதும் கொலை, கொள்ளை, கஞ்சா, அடிதடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிறுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, கொலை செய்வதற்காக வைத்திருந்த பெரிய அளவிலான பட்டாக்கத்தியை பறிமுதல் செய்த போலீசார், 4 பேர் மீதும் கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கொலை செய்வதற்காக கத்தியை எடுத்த கைகளுக்கு தற்போது மாவு கட்டு போடப்பட்டிருக்கும் நிலையில், கொலை திட்டத்தை முன்கூட்டியே அறிந்து, அதனை தடுத்த அம்பத்தூர் தனிப்படை போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.
இதையும் படிங்க: ஆயுதபூஜை, தீபாவளி விடுமுறை; கூடுதல் ரயில்களை இயக்க தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை!