சென்னையிலிருந்து சரக்கு விமானத்தில் வெளிநாடுகளுக்கு கொரியரில் தபால் அனுப்ப வந்திருந்த சரக்கு பாா்சல்களை விமான நிலைய சுங்கத்துறையினா் ஆய்வு செய்தனர்.
அப்போது சென்னையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பாா்சல்களில் இடுப்பு வலி நிவாரனி பெலட்கள், பெண்கள் உள்ளாடைகள், போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு கொடுக்கும் சாம்பியன் கோப்பைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தன.
சந்தேகத்தின் பெயரில் ஆய்வு செய்தபோது, பாா்சல்களை அனுப்பிய சென்னை முகவரி போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்து பாா்சல்களை திறந்து பாா்த்து அலுவலர்கள் சோதனையிட்டனா். அதில், ரூ. 40 லட்சம் மதிப்புள்ள நான்கு கிலோ போதை பொருள் இருந்தது தெரியவந்தது. இதை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, கொரியா் அலுவலகத்தில் இந்த பாா்சல்களை பதிவு செய்ய வந்த சென்னையைச் சோ்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.