சென்னை : பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் ஒரு அறையில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுவதற்கான பாட புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அந்த அறையின் பூட்டு, தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு 144 புத்தகங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவா ஹட்சன் (56), சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்தனர். இந்நிலையில் ஏற்கனவே புத்தக திருட்டில் ஈடுபட்ட நபர்கள், மீண்டும் அங்கு கொள்ளையடிக்கச் சென்றபோது சிக்கிக் கொண்டனர்.
பழைய இரும்புக் கடையில் விற்பனை
திருட்டில் ஈடுபட்டதாக வினோத் குமார்(26), தமிழ்வாணன்(26), பிரகாஷ்(45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் மூவரும் புத்தகத்தை திருடி பம்மலில் உள்ள பழைய இரும்புக் கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது.
பின்னர் அதன் மூலம் வந்த பணத்தை, போதை வஸ்துகள் வாங்க உபயோகப்படுத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து புத்தகத்தை எடைக்கு வாங்கிய, கடையின் உரிமையாளர் கோட்டைச்சாமியும் கைது செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: திருமணமான பெண்ணிடம் முத்தம் கேட்ட வீட்டு உரிமையாளர் கைது