சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில் ஒரு கும்பல் ஹெராயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சங்கர் நகர் காவல் துறையினருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற காவல் துறையினர், அங்கு ஹெராயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும், அவர்கள் அனைவரையும் காவல் துறையினர் சோதனை செய்து பார்த்த போது விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 60 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், அவர்கள் அனைவரையும் சங்கர் நகர் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதில் நான்கு பேரும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஐயுப் அலி (21), பாபுஷேக்(28), ஆலம்ஷேக் (50), ராகூப்(21) என்பதும்,
மேலும் இவர்கள் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து, அதே பகுதியில் கட்டட வேலைகள் செய்வது போல், கல்லூரி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஹெராயின் போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ஹெராயின் மதிப்பு சுமார் மூன்று லட்சம் ரூபாய் இருக்கும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தொடரும் ஆன்லைன் லோன் மோசடி- நூதன முறையில் மிரட்டிய வடமாநில கும்பல்