சென்னை: ஆவடி அடுத்து திருமுல்லைவாயில் அந்தோணி நகர் பூங்கா அருகே இரண்டு தரப்பு நபர்கள் அடித்துக் கொள்வதாக காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், உடனடியாக சம்பவ இடத்திற்கு திருமுல்லைவாயில் சிறப்புப்படை காவலர்கள் முகமது அலி (36) மற்றும் நரேந்திரன்(36) ஆகிய இருவரும் விரைந்து சென்றுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் பார்த்தபோது, ஒரு தரப்பினர் தப்பிச் சென்றுள்ளனர். அப்போது சம்பவ இடத்தில் நின்று கொண்டிருந்த வேலூரைச் சேர்ந்த பிரபு (28) மற்றும் பிரேம் (26) ஆகிய இருவரை விசாரித்தபோது, இதே பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் இருவரையும் தாக்கி விட்டுச் சென்றதாக கூறி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்த காவலர்கள் இருவரையும் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, பிரபு தனது பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் காணவில்லை என கூறியுள்ளார். சம்பவம் நடந்த இடத்தில் செல்போன் விழுந்து இருக்கலாம் எனக் கூறி, மீண்டும் சம்பவ இடத்திற்கு பிரபுவும், காவலரும் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இருவரும் செல்போனைத் தேடிக் கொண்டிருந்தபோது தங்களை அடிக்க அடி ஆட்களை அழைத்து வந்ததாக நினைத்து பிரபுவையும், காவலரையும் கும்பல் சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்று விட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் காவலர் நரேந்திரிடம் திருமுல்லைவாயில் போலீசார் புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்து, தப்பிச்சென்ற நபர்களை தேடிச் சென்றனர். அங்கு தலைமறைவாக இருந்த 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், திருமுல்லைவாயில் காவல் நிலையம் பின்புறம் உள்ள இ.எஸ்.ஐ அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த உதயா (28), அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (28), செல்வம் (31) மற்றும் வெற்றி (36) ஆகியோர் கைது செய்து போலீசாரைத் தாக்கியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:மிசோரம் சட்டமன்றத் தேர்தல் 2023; 12.80 சதவீத வாக்குகள் பதிவு!