சென்னை: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அன்மையில், பொதுமக்கள் கொழும்பில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். நாள்தோறும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து வரும் நிலையில், மக்கள் வாங்கும் சக்தியை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை தாக்கு பிடிக்க முடியாத இலங்கையில் இருந்து மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு படையெடுத்து வரும் சூழல் உருவாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் தடை பகுதியில் இலங்கை தமிழர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் நேற்று (மார்ச்.23) அருகே தஞ்சம் அடைந்தனர்.

இதனிடையே, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நேற்று (மார்ச்.23) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " இந்தியாவிடம் இருந்து இலங்கை பல கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது. அதை மீண்டும் இலங்கையால் தர முடியாது. பொருளாதார நெருக்கடியில் இலங்கை இருப்பதற்கு காரணம் கரோனா மட்டுமல்ல, ஏனென்றால் உலகம் முழுவதும் கரோனா தாக்கியது.

அங்கு நடந்த மிகப்பெரிய ஊழல் தான். எற்கனாவே சீனா இலங்கையில் பல்வேறு இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இன்னும் இடங்களை கைப்பற்ற உள்ளது. வாங்கிய கடனை செலுத்துவதற்காக மற்றும் ஒரு கடன். இதுவும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம். 1 கிலோ பச்சை மிளகாய் 1000, 1 கிலோ முறுங்கை ரூபாய் 1500. இது போன்று அனைத்து காய்கறி விலையும் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து பொருளாதார சிக்கல் நீடித்தால் இலங்கை மக்கள் தமிழகத்திற்கு வரும் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இலங்கைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும் ராஜபக்சே இலங்கையில் அனைத்தையும் இராணுவ மயமாக்கி உள்ளார். அதுமட்டுமில்லாமல் இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது எல்லாம் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம். கச்சத் தீவை இலங்கை பெற்ற பின்னர் இந்தியாவிற்கு விசுவாசமாக இல்லை. பாகிஸ்தான், சீனா நாடுகளுடன் போர் நடைபெற்ற போது இலங்கை இந்தியாவிற்கு ஆதரவாக இல்லை. இந்தியாவின் ஒரு பகுதியை மற்ற நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்றால் லோக்சபா, ராஜ்சபாவின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும்.

ஆனால், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆதரவு பெற வில்லை. ஆகையால் கச்சத்தீவு பிரச்சனையைத் தீர்க்க மீண்டும் கச்சத்தீவுவை இந்தியா பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவரை இல்லாத வகையில் டாலர், இந்திய பணத்திற்கு எதிரான இலங்கையின் பணம் அதலபாதாளத்திற்கு சென்று உள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க : கவுரவமாக, பிச்சை எடுத்து கூட நடிகர் சங்க கட்டட பணிகளை நிறைவு செய்வோம் - விஷால்