சென்னை: நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு உள்ளது. நடிகை ஜெயப்பிரதா 80களில் தமிழ், தெலுங்கு, இந்தி என கொடிகட்டிப் பறந்த நடிகை ஆவார். தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் உடன் நடித்த “சலங்கை ஒலி” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது. மேலும், இந்த படத்தின் மூலம் தனது நடிப்பை வெளிக் கொணர்ந்து சிறந்த நடிகை என அனைவரிடம் பாராட்டைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர், திருமண வாழ்வை தொடங்கி அரசியலில் ஈடுபட்டு எம்பி ஆகவும் பதவி வகித்தார். இவர் சென்னையைச் சேர்ந்த ராம் குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலையில் திரையரங்கம் நடத்தி வந்தார். இந்த திரையரங்கம் தற்போது இல்லை. மூடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
இதையும் படிங்க:காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் எதிரொலி - நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைப்பு!
இந்த நிலையில், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ. (ESI) தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை. இது தொடர்பாக, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து, ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு உயர் நீதிம்ன்ற நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
பின்னர், இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றம் நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெயப்பிரதா தரப்பில், தொழிலாளர்களிடம் பெற்ற தொகையை செலுத்தி விடுவதாக தெரிவித்தார். இதற்கு, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:திருவண்ணாமலையில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளராக மாறிய தமிழ்நாடு ஆளுநர்!