தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இரண்டு கோடியே 80 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. தலைமறைவான செந்தில் பாலாஜி தனக்கு முன் பிணை வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் 238 பேரை ஏமாற்றியிருப்பது தெரியவந்துள்ளதால் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் என விளக்கமளித்தார்.
மேலும், இந்த மோசடி வழக்கில் செந்தில் பாலாஜிதான் முக்கிய குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பல ஆவணங்கள் கிடைத்துள்ளது என்றும் தனது வாதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அப்போது, இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜியின் பெயர் இல்லாத நிலையில், சட்ட விதிகளைப் பின்பற்றாமல், அவரைக் கைது செய்ய காவல் துறையினர் முயற்சிப்பதாக செந்தில் பாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பும் நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்திய நீதிபதி, அதுவரை அவரைக் கைது செய்யக் கூடாது என்று தெரிவித்து வழக்கு விசாரணையை தள்ளி வைத்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, தேவைப்படும் போது மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும், தினமும் மத்திய குற்றப்பிரிவு உயர் அலுவலர் முன்பு கையெழுத்திட வேண்டும், பாஸ்போர்ட்டை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜிக்கு முன் பிணை வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ரயில் படிக்கட்டில் தூங்கிய இளைஞர் - தண்டவாளத்தில் விழுந்து உயிரிழப்பு