சென்னை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி, எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்திற்குப் பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.
அதிமுக தலைமை அலுவலகம் வந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளரைச் சந்தித்துப் பேசியது, "தொண்டர்கள் மகிழ்ச்சி அடையக் கூடிய வகையில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது. அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடையும் தீர்ப்பாக உள்ளது.
ஒபிஎஸ்-க்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அதிமுகவில் சம்பந்தம் இல்லை என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது. தற்போது பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. கௌரவர்கள் எவ்வளவு தான் சூழ்ச்சி செய்தாலும் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை ஈரோடு கிழக்கு தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என உறுதியுடன் கூறினார்.
மேலும், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் தவிர இவர்களுடன் சென்ற மற்ற தொண்டர்கள் யார் வந்தாலும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி ஆதரிப்பார். எதிர்க் கட்சி துணைத் தலைவர் இறுக்கை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு பிரதிபலிக்கும். பாஜக - அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடாது என தெரிவித்தார். இனி ஒபிஎஸ் அதிமுகவின் அதிகாரப் பூர்வ லெட்டர் பேடை பயன்படுத்த மாட்டார்" என தெரிவித்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியது, "அதிமுக தொண்டர்களின் எண்ணத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சூது கவ்விக் கொண்டிருந்த தர்ம யுத்தத்தை நீதி வென்றுள்ளது. ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப் பட உள்ள நிலையில் இந்த தீர்ப்பு இரட்டிப்பு சந்தோஷத்தை அளித்துள்ளது. அதிமுகவைப் பொறுத்த வரை எல்லா முடிவுகளையும் எடப்பாடி பழனிசாமி எடுப்பார். ஒபிஎஸ் சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை. ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தில் இன்னும் வேகமாகச் சென்று கொண்டு இருக்கிறோம். ஜெயலலிதாவின் ஆத்மா எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்னா யானையை பிடிக்க களமிறங்கிய கும்கி 'சின்னதம்பி'