ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினர் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபடுவதாக சென்னை தலைமை செயலகத்தில் இன்று (பிப்.20) மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், "ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விரைவில் நடக்க இருக்கும் சூழலில், ஜனநாயக விரோத செயல்களிலும், அத்துமீறல்களிலும், பணப்பட்டுவாடா நடவடிக்கைகளிலும் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயகம் ஏற்றுக்கொள்ள முடியாத செயலை திமுகவினர் செய்து வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் செல்வதில் கைதேர்ந்தவர். ஈரோடு கிழக்கு தொகுதி டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் தொகையை பெற்று தேர்தலுக்காக செலவு செய்து வருகிறார். தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிவருகிறார். ஓ. பன்னீர்செல்வம் திமுகவை நோக்கி பயணித்து வருகிறார். இப்போது அவர் ஆட்டக்களத்தில் இல்லை.
நாக்-அவுட் ஆகிவிட்டர். சப்பாத்தி, பரோட்டா, டீ , பஜ்ஜி, ஆம்லைட் போடுபவர்களே திமுகவின் அமைச்சர்களாக உள்ளது வேதனை அளிக்கிறது. மக்கள் திமுக ஆட்சியை விரும்பவில்லை. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை நடக்காத நாளே இல்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் விஸ்வரூபம் படம் குறித்த கருத்து தெரிவித்துள்ளார். அந்த படத்தில் ஒரு சமூகத்தை இழிவுப்படுத்தக்கூடாது என்று கூறியே சில காட்சிகளை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா நீக்க சொன்னார்.
அப்போது ஒன்றும் கமல் ஹாசன் பேசவில்லை. இப்போது கேள்வி எழுப்புகிறார். திமுக எம்பி கனிமொழியின் மிரட்டலுக்கு எல்லாம் அதிமுகவினர் பயப்பட மாட்டோம். பணநாயகத்தை விட ஜனநாயகத்தையே அதிமுகவினர் அதிகம் நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர் மீது தாக்குதல்; முதலமைச்சர் கண்டனம்