சென்னை: பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் 'நாக்' (தேசிய தர நிர்ணய மற்றும் மதிப்பீட்டு குழு) ஆய்வுக்கு சென்ற சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஆன்ட்ரூஸ் பிரான்சிஸ் (60) உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரின் உடல் சென்னை லயோலா கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட உள்ளது. இவர் திருச்சிராப்பள்ளி செயின்ட் செயின்ட் ஜோசப் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.
தற்பொழுது சென்னை லயோலா கல்லூரி சொசைட்டியின் பொருளாளராக இருந்தார். ஆன்ட்ரூஸ் பிரான்சிஸ் பல்வேறு பதவிகளில் இருந்த போது, விடுதி மாணவர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கினார்.
லயோலா கல்லூரியில் பணக்கார மாணவர்கள் மட்டுமே படித்த நிலையில், ஏழை மாணவர்களும் கல்வி பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். குறிப்பாக கல்லூரியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்தார். முதல்முதலில் சென்னை லயோலா கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தினார்.
சென்னை லயோலா கல்லூரியில் பி.எட் பட்டப்படிப்பு தொடங்கவும், வேட்டவலத்தில் அமைந்துள்ள லயோலா கல்லூரி, சேலம் மெட்டாலா லயோலா கல்லூரி ஆகியவை தொடங்கவும் முயற்சி செய்தார்.
மேலும் இவர் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தையும் செலுத்தி உள்ளார். இதனால் பல ஏழை மாணவர்கள் கல்வி பெற்று உயர் பதவிகளில் உள்ளனர். எளிமையான வாழ்க்கையை தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த ஆன்ட்ரூஸ் பிரான்சிஸ் உயிரிழப்பு மாணவ, மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பொதுத்துறை நிறுவனங்களுக்கு மூடுவிழா - ப.சிதம்பரம் கண்டனம்