சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு, மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி என்ற இனக்குழுவைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு மணிப்பூரில் வாழும் பிற இனத்தவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதேநேரம், பழங்குடியினர் பட்டியலில் ஏற்கனவே இருக்கும் நாகா மற்றும் குக்கி இன மக்கள் மைத்தேயி மக்களுக்கு எதிராக வன்முறை மிகுந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது வரை நடந்த மோதல்களில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் மணிப்பூர் மாநிலம் பெரும் பதற்றத்தில் உள்ளது.
இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், “கடந்த ஒரு மாதமாக பல்வேறு விஷயங்களை விவாதித்து வருகின்றோம். ஆனால் அதையும் தாண்டி பல்வேறு விஷயங்கள் விவாதத்திற்கு வராமல் இருக்கின்றது. குறிப்பாக, மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் இன்று வரை வெளியில் வராமல் இருக்கின்றது.
அங்கு ஒரு இன அழிவு நடந்து கொண்டிருக்கிறது. எந்தவித தொலைத்தொடர்பு வசதிகளும் அங்கு இல்லை. அனைத்தும் துண்டிக்கப்பட்டு இருக்கின்றது. பத்திரிகையாளர்கள் கூட உள்ளே செல்ல முடியாத நிலை இருக்கின்றது. ஒரு மாநிலத்தில் மதவாத அரசியல் நடைபெறும் பொழுது இது போன்ற பாதிப்பு ஏற்படும் என்பதற்கு அங்கு ஏற்பட்டுள்ள கலவரம் முன்னுதாரணமாக இருக்கின்றது.
2017 ஆம் ஆண்டு முதல் மதவாத அரசியலை பாஜக அங்கு முன்னெடுத்துள்ளது. அங்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்துத்துவாவை வளர்க்க அரசாங்கமே துணை நின்று ஒரு இனத்தை அழித்து வருகின்றது. மணிப்பூர் மக்களுக்கு ராணுவத்தின் மீதும் காவல் துறை மீது இருந்த நம்பிக்கை அனைத்தும் அழிந்து விட்டது. பொதுமக்களே தங்கள் கையில் ஆயுதங்களை ஏந்தி போராட்டத் தொடங்கி விட்டனர். அவர்கள் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு அழிந்து வருகின்றனர்.
மக்களிடமிருந்து இவற்றை மறைக்க வேண்டும் என்பதிலேயே பாஜக திசை திருப்பி வருகின்றது. தமிழகத்திலிருந்து மணிப்பூர் அதிக தொலைவிலிருந்தாலும் அந்த மக்களுக்கும் நமக்கும் தொடர்பு இல்லாவிட்டாலும் அவர்களுக்காக ஆதரவு தர வேண்டியது நமது கடமை. மணிப்பூர் தலைநகரமே பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கின்றது. பத்திரிக்கையாளர்கள் கூட அங்கு நெருங்க முடியாத ஒரு சூழல் உருவாக்கியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கலவரத்தைப் பண்ணக்கூடிய ஒரு அமைப்பை அரசாங்கமே உருவாக்கியுள்ளது. இம்பாலில் சாலையில் செல்பவர்களை எல்லாம் அடித்துக் கொல்கின்ற சம்பவம் நடந்தது. மக்கள் தங்களது இல்லத்தை விட்டு காடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் அங்கு நடத்தப்பட்டு வருகிறது.
அரசாங்கம், அரசியல் பிரச்சனைகள் என்பதையெல்லாம் தாண்டி அங்கு என்ன நடக்கிறது என்பதை நாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டியது நமது கடமை. மக்கள் மீது மக்களுக்கு வெறுப்பை விதைத்து அதன் மூலம் லாபம் சம்பாதிக்க நினைக்கிறது பாஜக. 292 இடங்களில் முகாம்கள் நடந்து வருகின்றது. அரசாங்கம் எத்தனை முகங்கள் வைத்துள்ளது? என்ற கேள்வியை பாஜக அரசிற்கு முன் வைக்கின்றேன்.
பொதுமக்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். கர்ப்பிணி பெண்கள் காடுகளிலேயே பிரசவிக்கும் ஒரு சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மக்களைத் திசை திருப்பக் கூடிய செயலில் பாஜக ஈடுபட்டு வருகின்றது. கிராமங்கள் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து வீடுகளும் கொளுத்தப்பட்டுள்ளது. எத்தனை பேர் வீடு இழந்து உடைமைகளை இழந்து உயிர்களை இழந்துள்ளனர் என்பதற்கான தரவுகள் அரசாங்கத்திடம் இருக்கின்றதா?
தற்போது நடைபெறும் பாஜக அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என மக்களே தெரிவித்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் பதினைந்து நாட்களில் தீர்வு கொண்டு வரப்படும் என தெரிவித்துச் செல்கின்றார். எங்கள் உயிர் பறி போய் கொண்டிருக்கும் வேளையில் 15 நாட்கள் கால அவகாசம் தேவையா? என மக்கள் கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர்.
மக்களுக்கு விரோதத்தை தூண்டி விட்டு ஒருவருக்கு ஒருவர் கொல்லும் நிலையைக் கொண்டு வந்து விட்டீர்கள். இதனை எப்படி தீர்க்க போகிறீர்கள்? என்பது தான் உள்துறை அமைச்சருக்கு நாங்கள் வைக்கும் கேள்வி. மே 3ஆம் தேதி இனப்படுகொலை தொடங்கும் பொழுது உள்துறை அமைச்சரும் பிரதமரும் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். மணிப்பூரை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.
கடந்த நான்கு வருடங்களாகவே பாஜக அரசு அந்த மாநிலத்தில் திட்டமிட்டு இந்து நேஷனலிசத்தை மக்கள் மனதில் விதைத்து கலவரத்தை வளர்த்து விட்டுள்ளனர். மாநிலத்தின் அரசாங்கமே மக்களுக்கு எதிராக இருக்கும் பொழுது மக்கள் யாரை நம்புவார்கள். அதனால் தான் ராணுவத்தையும் காவல்துறையையும் கூட மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை. அங்கு நடைபெறும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.
அரசாங்கத்தின் நிர்வாக திறன் இல்லாத காரணத்தால் அங்கு இன்னும் ஒரு மாத காலத்திற்கு இனப்படுகொலை நடைபெறும் என்பது போல் தெரிகின்றது. மதவாத அரசியலை அவர்கள் முன்னெடுப்பதால் தான் அரசாங்கம் அதை கண்டும் காணாமல் இருக்கின்றது” என கூறினார்.