சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திமுக தென்சென்னை கட்சி அலுவலகத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மார்பளவு சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், சிலை அமைப்பது கருணாநிதிக்குப் பெருமைத் தேடிதருவதற்கு அல்ல; அவரது உழைப்பையும், அவர் ஆற்றியுள்ள பணிகளையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக எனக் கூறினார்.
இரண்டு நாள்களாக உள்ளாட்சித் தேர்தல் மூலம் நல்ல செய்திகளைக் கேட்டுவருகின்றோம் என மகிழ்ச்சி தெரிவித்த அவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 2100 இடங்களிலும், அதிமுக 1781 இடங்களில் வெற்றிபெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, திமுக 319 இடங்களைக் கூடுதலாக கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது என்றார். அதேபோல மாவட்ட கவுன்சிலர் பதவிகளிலும் திமுக 23 இடங்களை கூடுதலாக கைப்பற்றியுள்ளதையும் குறிப்பிட்டார்.
ஆனால் சில ஊடகங்கள் சிலருக்கு பயந்து தேர்தல் முடிவுகளில் திமுக, அதிமுக சரிசமமாக வெற்றிபெற்றுள்ளது என்று வெளியிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், அந்த முடிவுகளில் எது வளர்பிறை, எது தேய்பிறை எனக் கேள்வி எழுப்பிய அவர், நடைபெறவுள்ள 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இவை எல்லாம் மாறும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. ம. சுப்பிரமணியன், பொன்முடி, எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கலந்துகொண்டனர். இதில், எம்.எல்.ஏ. ம. சுப்பிரமணியன் ஸ்டாலினுக்கு கேடயம், வாளினை வழங்கினார்.
இதையும் படிங்க:‘இன்று உள்ளாட்சி... விரைவில் நல்லாட்சி!’ - ஸ்டாலின்