சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரான பி.வி.ரமணாவின் அலுவலகம் சென்னையை அடுத்த அமைந்தகரை புல்லா அவென்யூ பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த அலுவலகத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் அதிகமான துர்நாற்றம் வீசி வந்துள்ளது. இதனை உணர்ந்த அப்பகுதி மக்கள், இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அமைந்தகரை காவல் துறையினர், அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அந்த அலுவலகத்தின் அறையில் அழுகிய நிலையிலான ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் விசாரணையை முடுக்கி உள்ளனர்.
இந்த விசாரணையில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடம் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த அப்துல் முகமது (43) என்பவரின் உடல்தான் அழுகிய நிலையில் அவரது அலுவலகத்திலேயே கண்டெடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. எனவே, இது குறித்து முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் முகமது ஓட்டுநராக 45 நாட்களுக்கு முன்னதாகத்தான் தன்னிடம் ஓட்டுநராக வேலை பார்க்கத் தொடங்கியதாக அமைச்சர் பி.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், ஓட்டுநர் அப்துல் முகமது கடந்த சில நாட்களாக குடிப்பழக்கம் காரணமாக சரி வர வேலைக்கு வருவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, புல்லா அவென்யூவில் இருக்கும் அலுவலகத்தில்தான் ஓட்டுநர்கள் தங்குவார்கள் எனவும் விசாரணையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் காவல் துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், ஓட்டுநர் அப்துல் முகமதுக்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்த காரணத்தினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதிலும், இனி மது அருந்தக் கூடாது என்றும், அவ்வாறு மது அருந்தினால் விபரீதமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் தெரிவித்தும் குடிப்பழக்கத்தில் அப்துல் முகமது ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஓட்டுநர் அப்துல் முகமது அலுவலகத்தில் தங்கி இருக்கும்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளாரா அல்லது மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையாக இருக்குமோ என்ற பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது 256 கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பான ஊழல் வழக்கை சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவரது கார் ஓட்டுநர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: குட்கா முறைகேடு வழக்கு - திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐக்கு அவகாசம்!