சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை நடிகை ஒருவர் முன்னதாக பாலியல் புகார் அளித்திருந்தார்.
அதில், "தானும் அமைச்சரும் ஒன்றாக வாழ்ந்தோம். தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி அவர் ஏமாற்றியதுடன், கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்ய வைத்து, அந்தரங்கப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார்" என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதன் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
மனு தள்ளுபடி
இதனிடையே, மணிகண்டன் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு நடிகை தரப்பிலிருந்தும், காவல் துறை தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
குறிப்பாக மணிகண்டன் அமைச்சராக இருந்தவர் என்பதால், அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாரங்களை அழிக்க நேரிடும் என்ற அடிப்படையில் வாதம் முன்வைக்கப்பட்டதால், அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தனிப்படை
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிப்பதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், முன்னதாக அவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, ரகசிய இடத்தில் வைத்து அவரை காவல் துறையினர் விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைது குறித்த விவரங்கள் எதுவும் காவல் துறை தரப்பில் இன்னும் வெளியிடப்படவில்லை.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நடிகை சாந்தினியின் வழக்கறிஞர் நோட்டீஸ்!