சென்னை, பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட குரங்குகள் உணவு தேடி தஞ்சம் அடைந்துள்ளன. அக்குரங்களுக்கு அப்பகுதி மக்கள் தினமும் உணவு அளித்துவந்தனர். இந்நிலையில் அந்த நான்கு குரங்குகள் அங்குள்ள மரங்களில் சுற்றித் திரியும்போது, ஒரு குரங்கு மரக்கிளையிலிருந்து தவறி கீழே விழுந்தது.
கீழே விழுந்த அந்தக் குரங்கை, நான்கு நாய்கள் கடிக்க தொடங்கின. அதைக்கண்ட அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டிவிட்டு, குரங்கை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் குரங்கு ஆக்ரோஷமாக இருந்ததால், அங்கிருந்து பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வேளச்சேரி வன உயிரியல் பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அத்தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வனத்துறையினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடி, குரங்கை மீட்டு வேளச்சேரியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் கொண்டு சென்றனர். அங்கு அந்த குரங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இயற்கை உணவுகளுக்கு மாறியுள்ள சத்தியமங்கலம் கருமந்திக்குரங்குகள்!