சென்னை: இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து வருபவர்கள் ஹெல்மெட் அணிவது அவசியம் என்பதை வலியுறுத்தி சென்னை போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து வருபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தும் வருகின்றனர்.
அதனடிப்படையில் கடந்த மே 23 ஆம் தேதி முதல் நேற்று வரை ஹெல்மெட் விதிமீறல்களுக்காக இருசக்கர வாகன ஓட்டிகள் மீது 72,744 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 72 லட்சத்து 74 ஆயிரத்து 400 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள் மீது 69,912 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 63 லட்சத்து 91 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஹெல்மெட் விதிமீறல்கள் தொடர்பாக 1 லட்சத்து 36 ஆயிரத்து 656 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1 கோடியே 36 லட்சத்து 65 ஆயிரத்து 600 ரூபாய் அபராதத் தொகையாக விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: நகை வாங்குவது போல திருட்டு: கேரள இளைஞர் கைது