சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் உணவகம் மற்றும் இரண்டு விரைவு சிற்றுண்டி கடைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதனை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், “முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற நாளில் இருந்து அனைத்து துறைகளையும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதில் சுற்றுலாத்துறை என்பது முக்கியமான துறை. மற்ற மாநிலங்களை காட்டிலும் சுற்றுலாத்துறையில் தமிழகத்தில் தான் வருவாய் அதிகம் வருகிறது. தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
முதலமைச்சர் உத்தரவின் பேரில் சுற்றுலாத்துறையில் 53 உணவகங்கள் இருக்கின்றன. 28 உணவகத்தை நேரடியாக துறையே நடத்தி வருகிறது. உணவகத்தை தற்காலிக முறையில் மாற்றம் செய்யும் வகையில் மறு சீரமைப்பு செய்ய உத்தரவிட்டதன் பேரில், வண்டலூரில் உள்ள உணவகத்தை 40 லட்ச ரூபாய் செலவில் மறு சீரமைப்பு செய்துள்ளோம்.
ஆண்டுக்கு 20 லட்சம் பேர் வண்டலூர் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். இங்கு ’குயிக் பெஞ்ச்’ என்ற பெயரில் இரு கடைகள் ஆரம்பித்து வைத்திருக்கிறோம். சுற்றுலாத்துறை நடத்துகின்ற அனைத்து உணவகங்களும் மிகச்சிறப்பான முறையில் மேம்படுத்தி நடத்தப்படும்.
இடத்திற்கு தகுந்தாற்போல் விற்பனை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்காக ஐஸ்கிரீம், ஸ்நேக்ஸ், பிஸ்கட், கேக், பப்ஸ் விற்கப்படுகிறது. எதிர்காலத்தில் கடந்த காலம் போல் இல்லாமல் தமிழ்நாட்டில் வருமானத்தை வருடாவருடம் உயர்த்த வழி வகை செய்யப்படும். மாமல்லபுரத்தில் நாட்டியம் 23ஆம் தேதி ஆரம்பித்து 12ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது” என்றார்.
அடுத்ததாக பேசிய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், “அமைச்சராக பொறுப்பேற்று இரண்டு வாரங்கள் தான் ஆகின்றது. நேற்று தான் முதல் ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டது. வனத்துறையில் கடந்த காலத்தில் என்னென்ன அறிவுரைகள் செய்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆய்வு செய்திருப்பதாகவும், அறிவிப்பு நிலை அனைத்தும் 15 நாட்களில் சிறப்பாக நடக்கும்” என்றார்.
காப்புக்காடுகள் அருகில் கல் குவாரி அனுமதி வழங்கி இருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நேற்று தான் அரசாணை வந்துள்ளது. என்னவென்று விசாரித்து சொல்கிறேன்” எனத் தெரிவித்தார்.