சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் பயணிகள் வந்து செல்வதற்காக ஏற்கெனவே ஷேர் ஆட்டோக்கள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட்டுவருகின்றன. தற்போது புதிய திட்டமாக ஃப்ளை (FLYY) என்கிற பெயரில் இ - பைக்குகள் இயக்கப்படுகின்றன. இது பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் முதல்கட்டமாக 6 இ - பைக்குகள் சென்னை - ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இயக்கப்பட்டுவருகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக, சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்திலும் இ - பைக்குகள் பயன்படுத்த மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய்
இந்த பைக்குகள் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பைக்குகளை எடுத்துச் செல்ல வாடிக்கையாளர்கள் தங்களது ஏ.டி.எம். அட்டை மூலம் பதிவு செய்துகொள்ளலாம். பின்னர், அவர்களுக்கு பைக்குடன் தலைக்கவசமும் வழங்கப்படுகிறது. நிமிடத்திற்கு ஒரு ரூபாய் கணக்கில் வாடிக்கையாளர் எத்தனை நிமிடங்கள் பயன்படுத்துகிறார் என்கிற விவரம், கிலோ மீட்டர் விவரங்களும் பைக்கில் தெரியும்படி பொருத்தப்பட்டுள்ளது.
நகரில் எங்கு வேண்டுமானாலும் வாகனத்தை எடுத்துச் செல்லமுடியும். திரும்ப வழங்கும்வரை வாடிக்கையாளருக்கான கட்டணத் தொகை அவரின் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும். இதற்காக ஃப்ளை என்கிற செயலியை பயன்படுத்தி பைக்குகளை பெற்றுக்கொள்ளலாம் என்கின்றனர் செயலியின் பணியாளர்கள்.
கடந்த 2ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட இச்சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், ஆலந்தூரில் இன்னும் கூடுதல் பைக்குகள் இணைக்கவுள்ளனர். பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இந்த சேவைகள் இருந்தாலும் சென்னையில் இந்தச் சேவை சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.
இதையும் படிங்க: சென்செக்ஸ்சிலிருந்து வெளியேறும் டாடா மோட்டார்ஸ், யெஸ் வங்கி பங்குகள்