இது குறித்து காவல் நிலையத்தில் அப்பெண் அளித்துள்ள புகாரில், “2012ஆம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது ரமேஷ் என்பவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2013ஆம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது அங்கு பணிபுரிந்த முருகேசன் என்பவருடன் பிரச்னை ஏற்பட்டது. இதனைத் தீர்த்துவைக்க ரமேஷ் உதவினார். இதனால் இருவரும் நெருங்கிப் பழகி வந்தோம்.
சிறிது நாள்கள் கழித்து ரமேஷ் என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினார். தொடர்ந்து என்னுடன் நெருங்கிப் பழகி வந்தார். பின் ஒருநாள், நான் குளிக்கும் காணொளி ஒன்று தெரியாமல் முருகேசனிடம் சென்று விட்டதாகவும், தற்போது அதனை இணையத்தில் வெளியிடாமல் இருக்க 12 லட்சம் ரூபாய் கேட்டு முருகேசன் மிரட்டுவதாகவும் ரமேஷ் என்னிடம் கூறினார்.
அதனைத் தொடர்ந்து நான் ரமேஷிடம் இதுவரை சுமார் 20 லட்சம் ரூபாயும், 19 சவரன் நகைகளையும் கொடுத்துள்ளேன். இப்போது என்னை ரமேஷ் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார். எனது சாதியைப் பற்றி அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர், தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.