கரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துவரும் நிலையில், இன்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
வைரஸ் பரவலைத் தடுக்க சர்வதேச விமான போக்குவரத்துகள் ரத்துசெய்யப்பட்டுள்ள காரணத்தால் விமான நிலையம் பயணிகளின்றி வெறிச்சோடியுள்ளது.
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் ஒரு நாளுக்குப் புறப்படும் விமானங்கள் 196, வருகை விமானங்கள் 196, மொத்தம் 392. அதில் 200-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இன்று ரத்துசெய்யப்பட்டுள்ளன. மீதியுள்ள விமானங்கள் இயங்குவதாக அறிவிக்கப்பட்டாலும், சில விமானங்கள் பயணிகளின்றி இறுதி நேரத்தில் ரத்துசெய்யப்படுகின்றன.
இதேபோல் சா்வதேச விமானங்களைப் பொறுத்தவரையில் துபாய், மஸ்கட், கோலாலம்பூர், கொழும்பு, சார்ஜா, லண்டன், ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு வரக்கூடிய 57 விமானங்களும் சென்னையிலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லக்கூடிய 57 விமானங்களும் மொத்தம் 114 விமானங்கள் செயல்பட்டுவந்தன.
மத்திய அரசு இன்றிலிருந்து வரும் 29ஆம் தேதிவரை இந்தியாவில் சா்வதேச விமானங்கள் இயக்கத்திற்கு தடைவிதித்துள்ளதால்,114 விமானங்களும் முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை சா்வதேச விமான நிலையம் முழுவதுமாக வெறிச்சோடியது.
அங்குள்ள 'டூட்டிபிரி ஷாப்' எனப்படும் வரி இல்லா விற்பனைக் கடைகள், உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ளன. சா்வதேச முனையத்தில் தற்போது விமான நிலைய பராமரிப்புப் பணியாளா்கள், பாதுகாப்பு அலுவலர்கள் மட்டுமே உள்ளனர்.
அதேபோல் விமான நிலைய வளாகம் முழுவதும் வெறிச்சோடிக் காணப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் நாளொன்றுக்கு உள்நாடு, சா்வதேச விமானங்கள் வருகை, புறப்பாடு அனைத்தும் சோ்த்து 506 விமானங்கள் இயக்கப்பட்டு 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் பயணிகள் பயணித்துவந்தனர். இரவு பகல் வித்தியாசமின்றி 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிய விமான நிலையம், தற்போது பகலில்கூட இரவுபோல் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனா: 4,800 உயிர் பலிக்கு இத்தாலியின் இந்தப் பொறுப்பற்ற செயல்தான் காரணமா?