சென்னை : விஜயதசமி விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்புவோரின் போக்குவரத்து தேர்வுகளில் விமான போக்குவரத்தும் அடங்கும். இருப்பினும் போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை செல்ல இருந்த விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டன.
அதேநேரம், கோவா, பெங்களூரு, ஹைதராபாத், சீரடி, மதுரை செல்ல இருந்த விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகியதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தமிழ்நாட்டில் விஜயதசமி, ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் நேற்று (அக். 24) மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாமல் வெறுச்சோடி காணப்பட்டது.
அதேபோல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலும், நேற்று (அக். 24) பயணிகள் கூட்டம் அதிக அளவில் இல்லாமல், மிகக் குறைந்த அளவு பயணிகளுடன், உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், போதிய பயணிகள் இல்லாமல் மும்பை, டெல்லி செல்லும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
நேற்று மாலை 6:30 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 8:20 மணிக்கு மும்பை சென்றடைய இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பயணிகள் குறைவால் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், இரவு 8:20 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 11:10 மணிக்கு, டெல்லி விமான நிலையத்தை சென்றடையும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் பயணிகள் வரத்து குறைவால் ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க: லியோ பாடல் 'peaky blinders' வெப் சீரியஸில் இருந்து காப்பியா? - அனிருத்தை துரத்தும் காப்பி கேட் சர்ச்சை!
அதேநேரம் அந்த இரண்டு விமானங்களில் செல்ல முன்பதிவு செய்து இருந்த மிகக் குறைந்த அளவு பயணிகளின் விமான டிக்கெட்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வேறு விமானங்களின் அனுப்பி வைக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து கோவா செல்லும் விமானம் சுமார் ஐந்தரை மணி நேரமும், சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் விமானம் 3 மணி நேரமும் தாமதமாக புறப்பட்டது.
மேலும், சென்னை - ஹைதராபாத் மற்றும் மதுரை விமானங்கள் 2 மணி நேரமும், சென்னை சீரடி விமானம் இரண்டரை மணி நேரமும், என அனைத்து விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. எதிர்பாராத விதமாக விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டும், பல மணி நேரம் தாமதம் ஆகிய காரணத்தாலும் சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதையும் படிங்க: மது போதையில் பொது இடத்தில் ரகளை.. ஜெயிலர் பட வில்லன் அதிரடி கைது!