சென்னை: கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகர் என்பவரிடம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியபோது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் முதலில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
பின்னர் மயக்கமடைந்த நிலையில் ராஜசேகரை சுமார் 7 மணியளவில் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜசேகர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். ராஜசேகரின் இடது தொடைப்பகுதியில் காயம் இருப்பதாகவும், வேறு வெளிப்புற காயங்கள் ஏதும் இல்லை என்பதும் காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த ராஜசேகர் தொடையில் காயம் இருந்ததாக விசாரணையில் தகவல் வெளியானதால், விசாரணைக் கைதி சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, தமிழ்நாடு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், இந்த மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அவர் விசாரணையை தொடங்கியுள்ளார். இதனிடையே, கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமைக் காவலர்கள் ஜெயசேகர், மணிவண்ணன், காவலர் சத்தியமூர்த்தி ஆகியோரை சஸ்பெண்டு செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, "குற்ற வழக்கு ஒன்றில் ராஜசேகரை மணலியில் இருந்து பிடித்து விசாரணைக்காகக் கொண்டு வந்தனர். 27 வழக்குகள் ராஜசேகர் மீது இருக்கிறது. சோழவரம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி.
என்னென்ன வழக்குகளில் தொடர்புஇருக்கிறது என்பது தொடர்பாக விசாரித்த போது ராஜசேகருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் உள்ளது.
அருகில் உள்ள மருத்துவமனைக்கு 1 மணிக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனைக்குப் பிறகு நன்றாக இருப்பதாகத் தெரிந்தது. அழைத்துச் சென்றனர்.
மீண்டும் 4 மணிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நன்றாக இருந்த போது வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அழைத்துச் செல்லும் போது மரணமடைந்து விட்டார். இது தொடர்பாக குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 176 (1)(ஏ) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உள்ளார். ராஜசேகரிடம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் என 3 பேர் விசாரணை நடத்தி உள்ளனர். குற்ற வழக்கை மட்டுமே விசாரித்ததாகத் தெரிவித்துள்ளனர். காவல் ஆய்வாளர் உள்பட 5 பேரை சஸ்பெண்டு செய்துள்ளோம். எவரெடி காலனி போலீஸ் பூத் என்பது ரகசிய இடமில்லை. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தான் விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.
இது போல தொடர்ச்சியாக நடக்கிறது என்பது சொல்ல முடியாது. குற்ற விசாரணையை நிறுத்திவிட முடியுமா? வழக்குகள் ரிப்போட் ஆகிறது. ஒவ்வொரு வழக்குகளிலும் புலன் விசாரணை செய்வது காவல்துறையின் கடமை. சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துவது என்பது வழிமுறையோடு நடத்தி வருகிறது.
இது போல ஒன்றிரண்டு சம்பவங்கள் நடைபெறும் போது அதனை வழி நெறி படுத்துவதற்கான முயற்சிகளையும் காவல்துறை தொடர்ந்து செய்து வருகிறது.
இரவு நேரங்களில் யாரையும் கஸ்டடி வைக்கக்கூடாது, பெண்கள், வயதானவர்களை அழைத்து வரக்கூடாது இதுபோன்ற வழிமுறைகளைத் தினமும் உயர் அதிகாரிகள் தெரிவித்துத் தான் வருகிறோம்.
ஒன்றிரண்டு சம்பவங்களை வைத்து காவல்துறைக்கு வேறொரு கலரில் பெயிண்ட் அடிப்பது சரியில்லாத ஒன்று. அந்த மாதிரியான காவல்துறை சென்னை காவல்துறை கிடையாது" என்று அன்பு கூறினார்.
இதையும் படிங்க: லாக்-அப் மரணங்கள்: காவல் துறையை வறுத்தெடுத்த உயர் நீதிமன்றம்!