தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுக்கடைகள் உட்பட அனைத்து அரசு, தனியார் வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி சிலர் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மது விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புளியந்தோப்பு காவல் துணை கண்காணிப்பாளருக்கு, சட்டவிரோதமாக காரில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மதுக்கடத்தலில் ஈடுபடுவோரைக் கைது செய்ய அவர் உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை காவலர்கள் மூலக்கடை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக போலீஸ் என்று எழுதப்பட்ட ஐந்து பேர் பயணித்த கார் ஒன்று வந்தது. காவலர்கள், காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரிலிருந்து 228 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து, காரில் பயணித்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் பிரபாகரன்(48), உள்ளாட்சி முரசு நாளிதழின் நிருபர் ராஜ்குமார்(28), கார்த்திக்(39), மோகன்குமார், வெங்கடேசன் (55) என்பது தெரிய வந்தது.
இவர்கள் எம்.கே.பி நகர் சரகத்தில் உளவுப்பிரிவு காவலராக பணியாற்றும் தேவக்குமாரின் உதவியோடு, ஆந்திர மாநிலம் ராமாபுரத்தில் மதுபாட்டில்களை வாங்கியுள்ளனர். இதனால் உயர் அலுவலர்கள், உளவுப்பிரிவு காவலர் தேவக்குமாரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : இனி தாய்மொழியில் பொறியியல் படிக்கலாம்!