சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே ராஜகீழ்பாக்கம் பகுதியில் உள்ள கேஸ் பங்க்கில் இருதினங்களுக்கு முன் இரவு நேரத்தில் ஆட்டோவில் கேஸ் நிரப்புவதற்காக ஆட்டோ ஓட்டுநர் சதீஸ் என்பவர் வந்துள்ளார். கேஸ் நிரப்பிய பின்பு அதற்கான பணம் கேட்ட பங்க் ஊழியரை, தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த பங்க் ஊழியர்கள் கையில் வைத்திருந்த பணத்தை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
அப்போது ஊழியர்கள் கீழே போட்டுவிட்டுச் சென்ற பணத்தை எடுத்துக்கொண்டு சதீஸ், மகி, லிங்கேஸ்வரன், அரவிந்த், சாந்தகுமார் ஆகியோர் தப்பிச்சென்றனர். அதனையடுத்து பங்க் உரிமையாளரிடம் நடந்தவற்றை ஊழியர்கள் கூறியுள்ளனர். பின்னர் பங்க் உரிமையாளர் சேலையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
பின்னர் குரோம்பேட்டை மற்றும் சேலையூர் பகுதிகளைச் சேர்ந்த சதீஸ் (21), மகி (19) லிங்கேஸ்வரன்(20), அரவிந்த் (22) சாந்தகுமார் (28) ஆகிய 5 பேரையும் கைதுசெய்து சேலையூர் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். கைது செய்யப்பட்ட சதீஸ், லிங்கேஸ்வரன் ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திண்டுக்கல் அருகே பேக்கரியில் கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது!