சென்னை: தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (ஜன.20) மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீனவர் சங்க பிரதிநிதி நசிரியத், "மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் 13 மீனவர் மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் முதலமைச்சரை சந்தித்தோம்.
முன்னதாக மீன்பிடி தடைகாலத்தில் நிவாரண தொகை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது. அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மீன்வள கல்லூரிகளில் மீனவர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்துள்ள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டோம்.
மேலும் மீனவர்களுக்கு டீசல் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும், இலங்கை கடற்படையால் பாதிப்புக்குள்ளான மீனவர்களையும் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையில் தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் மற்றும் படகுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மீனவ மக்களின் குறைகளை கேட்க எப்போதும் தயாராக முதலமைச்சர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: கருணை அடிப்படையில் பணி வழங்கிய அமைச்சர் சி.வி கணேசன்!