இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட இந்திய மீனவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரி, மீனவர் நல அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்கள் மறுவாழ்வுக்காக தமிழ்நாடு அரசுக்கு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், 2014ஆம் ஆண்டு வரை 2,100 இந்திய மீனவர்களையும், 381 படகுகளையும் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட மீனவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு உத்தரவிட்டதை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, மத்திய அரசு ஒதுக்கிய 300 கோடி ரூபாய் நிதி எப்போது தமிழ்நாடு அரசுக்கு கிடைத்தது? அந்த நிதியின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்னென்ன? கூடுதல் நிதி ஏதும் தமிழ்நாடு அரசு செலவு செய்ததா? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மீன்வளத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய அரசு ஒதுக்கிய நிதியின் கீழ் எத்தனை மீனவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன? என்பது குறித்தும் இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கில் மீன்வளத்துறை எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் மீன்வளத்துறை இயக்குனர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க...'நாலு வருஷ ஆசை' - கல்லூரி மாணவிக்கு டேட்டிங் ரெஸ்யூம்... விளையாட்டா சொன்னதற்காக இப்படியா!