சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஒவ்வொரு ஆண்டும் எதிர்கொள்ளும் வடகிழக்கு பருவ மழை தற்போது தென் மேற்கு வங்ககடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். இது குறித்து நேற்றே முதலமைச்சர் உரிய அறிவுரை வழங்கியுள்ளார். புயல் நிலவரம் தொடர்பாக கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து கண்காணித்து அரசிற்கு தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், விழுப்புரம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புயலின் வேகம் அதிகரிப்பதும் குறைவதுமாக மாறிக்கொண்டே உள்ளது. நேற்றைவிட 300 கிலோமீட்டர் நெருங்கி வந்துள்ளது. நிவர் புயல் நெருங்க நெருங்க கடல் கொந்தளிப்பாக இருக்கும். காற்று வீசக்கூடும்.
இன்று முதல் நாளை மறு நாள்வரை மழை பெய்யக்கூடும். 25ஆம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் மாவட்டங்களில் அதீத மழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற 133 படகுகளில் உள்ள மீனவர்கள் வட தமிழக கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பாக கரை திரும்பி உள்ளனர்.
ஏழு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 9 ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 14,144 பாசன ஏரிகளில் 1, 175 ஏரிகள் 100% கொள்ளளவு எட்டியுள்ளன. கடலோர மாவட்டங்களில் 295 ஏரிகள் முழு கொள்ளவு எட்டியுள்ளது. பொதுமக்கள் வீணான வதந்திகளை நம்பாமல் TN smart செயலி மற்றும் ஊடகங்கள் அளிக்கும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும்.
பொதுமக்கள் நிச்சயமாக அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருப்பதோடு வரும் ஏழு நாட்களுக்கு தேவையான உணவு, நீர், மருந்துகளை கையிருப்பில் வைக்க வேண்டும். நீர் தேங்கிய இடங்களில் உடனடியாக நீரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்டா பகுதியில் இருக்கும் மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
பள்ளிக்கூடங்கள், சமூதாயக்கூடங்கள் என போதுமான அளவு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முடிச்சூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை நீர் தேங்காமல் தடுக்கவும், ஒரு சில இடங்களில் நீரை வெளியேற்ற பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன் வந்த வர்தா, கஜா புயல்களால் ஏற்பட்ட பாதிப்புபோல் தற்போது ஏற்படாது. புயலால் கரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் தடைபடாது. கரோனா விழிப்புணர்வுகளையும் பொதுமக்கள் நிச்சயமாக கடைபிடிப்பது அவசியம்” என்றார்.