சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநரகத்தில், எலிக்காய்ச்சலை கண்டறியக் கூடிய லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "டி.எம்.எஸ்.வளாகத்தில் லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 இடங்களில் மட்டுமே இந்த ஆய்வகம் உள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை எலிக் காய்ச்சலை கண்டறிய எலிசா என்ற பரிசோதனை உதவியது. இனி, எலிக் காய்ச்சலை கண்டறிய லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகம் உதவியாக இருக்கும். எலிக்காய்ச்சல், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய். சிறுநீரகம், நுரையீரல் உள்ளிடவற்றைப் பாதிக்கும்.
எலிக்காய்ச்சலால் தமிழ்நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு 2 பேர் மரணம் அடைந்தனர். இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் பேரில் 10 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். மழைக்காலத்தில் காலணி அணியாமல் நடந்தால் எலிக்காய்ச்சல் பாதிப்பு வருகிறது. சிறிய அளவிலான காய்ச்சல், கண் எரிச்சல், கண் சிவத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்ட உடனே சிகிச்சை எடுத்துக்கொண்டால் பாதிப்பு இருக்காது.
கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனைக்கு முறையான சிகிச்சை அளித்தோம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கவனக்குறைவால் தவறு நடந்திருந்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருந்தகங்கள் மற்றும் தனியார் மருந்தகங்களில் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்வதைத் தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, காலாவதியான மருந்துகள் விற்பனை செய்வதைத் தடுக்க மாவட்டம்தோறும் பறக்கும்படை அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டு 377 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், இதில் 106 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். கடந்த 11 மாதங்களில் 4 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது, டெங்கு பாதிப்பை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
சென்னை கிண்டி கிங்ஸ் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில் செயல்பாட்டுக்கு வரும்" என்று கூறினார்.
இதையும் படிங்க:"மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கையால் தண்ணீர் தேங்கவில்லை" - கே.என் நேரு