சென்னை: கேரளாவில் ஒரு வழக்கறிஞராக தனது பணியைத் துவங்கி உச்சநீதிமன்ற நீதிபதி வரை உயர்ந்தவர் பாத்திமா பீவி. சுதந்திரத்திற்கு முந்தைய கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பத்தினம்திட்டாவில் 1927ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி அண்ணாவீட்டில் மீரா சாஹிப்-கதீஜா பீவி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.
பாத்திமா பீவியின் 8 சகோதர சகோதரிகளில் அவர் மூத்தவர் ஆவார். அரசு ஊழியரான பாத்திமா பீவியின் தந்தை, அவரது பிள்ளைகளை ஆண் பெண் பேதமின்றி சமமாக கல்வி கற்க ஊக்குவித்தார். பாத்திமா, பத்தினம்திட்டாவில் உள்ள கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் 1943ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, திருவனந்தபுரத்தில் அறிவியல் பிரிவில் ஆறு ஆண்டுகள் பயின்று பட்டம் பெற்றார்.
அந்த காலத்தில் ஒரு பெண் கல்விக்காக குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியூர் செல்வது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால் பாத்திமா பீவியின் தந்தை முழுமனதுடன் அவருக்கு உறுதுணையாக இருந்தார். பாத்திமா எம்எஸ்சி படிக்க விருப்பப்பட்டார், ஆனால் அவரது விருப்பத்தை தந்தை நிராகரித்தார்.
பாத்திமா விரும்பியபடி எம்எஸ்சி படித்தால் திருவனந்தபுரத்தில் ஒரு கல்லூரியில் பேராசிரியர் ஆகிவிடுவார் என எண்ணிய அவரது தந்தை, பாத்திமா சட்டம் பயில வேண்டும் என விரும்பினார். அதனால் அவரை திருவனந்தபுரத்தில் சட்டம் பயில சேர்த்து விட்டார். அப்போது திருவனந்தபுரத்தில் நீதித்துறை அதிகாரியாக பணியாற்றிய அன்னா சாண்டி என்பவரது நடவடிக்கையால் கவரப்பட்ட பாத்திமாவின் தந்தை தனது மகளும் நீதித்துறையில் முத்திரை பதிக்க வேண்டும் என எண்ணினார்.
பாத்திமா பீவி அவரது வகுப்பில் இருந்த ஐந்து மாணவிகளில் நன்கு படிக்கக் கூடிய மாணவியாக விளங்கினார். பின்னர் ஒரு வருடம் மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் பயிற்சி மேற்கொண்டார். 1950இல் தனது நீதித்துறை பயணத்தை துவங்கிய பாத்திமா பீவி பலவற்றிலும் முன்னிலை பெற்று விளங்கினார்.
1949-1950இல் இந்திய பார் கவுன்சில் தேர்வில் முதல் இடம் பெற்ற பெண்ணாக விளங்கிய இவர் அதற்காக தங்கப்பதக்கமும் பெற்றார். 1950 நவம்பர் மாதம் 14ஆம் தேதி பாத்திமா, கொல்லத்தில் தனது நீதித்துறை பயணத்தை துவங்கிய போது நீதிமன்ற வளாகத்தில், அதிகாரத்தில் என ஆண்கள் கோலோச்சினர். அங்கு பெண்களைப் பார்ப்பதே அரிதானதாக இருந்தது.
கொல்லம் நீதிமன்ற வளாகத்தில் தனியொரு முக்காடு அணிந்த பெண்ணாக அவர் 8 ஆண்டுகள் வலம்வந்த அவர் பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார். அவர் வழக்கறிஞராக பணியாற்றியதை விட அவரது நீதித்துறை பயணம் மிகவும் ஈர்ப்புடையதாக இருந்ததாகவும், அப்போது பெண் வழக்கறிஞர்கள் பொதுமக்களால் ஆதரிக்கப்படவில்லை எனவும், வெகுசிலரே வழக்கறிஞராக வெற்றி பெற்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாத்திமா பீவி 1958ஆம் ஆண்டு கேரள துணை நீதித்துறை சேவை முன்சீப் ஆக நியமிக்கப்பட்டார். பின்னர் 1968ஆம் ஆண்டு துணை நீதித்துறை நீதிபதியாக உயர்ந்தார். அடுத்தடுத்து விரைவாக பதவி உயர்வுகளைக் கண்ட அவர் 1972இல் துணை நீதித்துறை தலைமை மாஜிஸ்திரேட் ஆகவும், 1974இல் மாவட்ட அமர்வு நீதிபதி ஆகவும், 1980ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
பின்னர், மூன்று ஆண்டுகளுக்கு 1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும், உயர் நீதிதுறையில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இஸ்லாமிய பெண்மணியாகவும் ஆனார். ஓராண்டுக்கு பின்னர் கேரள உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
பின்னர், சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பாத்திமா பீவி உச்ச நீதிமன்ற நீதிபதியாக 1989ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றார். அப்போது அவர் ஒரு பேட்டியில், “நான் மூடியிருந்த கதவுகளைத் திறந்தேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
நாடு சுதந்திரமடைந்து நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் முதல் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதியாக பாத்திமா பீவி நியமிக்கப்பட்டு இருந்தார். இருப்பினும் நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஆண்களுக்கு நிகராக இல்லை. 2016ஆம் ஆண்டு பாத்திமா பீவியிடம் ஒரு பேட்டியில், நீதித்துறை ஆணாதிக்கம் மிக்கதாக இருந்ததா எனக் கெள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அதற்கு அவர், “நிச்சயமாக! அதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போது பார் கவுன்சில், பெஞ்ச் என இரண்டிலும் பெண்களின் பங்கு அதிகம் இருக்கிறது. ஆனால் ஆண்கள் அளவிற்கு இல்லாமல் பெண்களின் பங்கு குறைவாக உள்ளது. ஆனால் அதற்கும் காரணம் இருக்கிறது. பெண்கள் தாமதமாக தான் இந்த களத்திற்குள் நுழைந்தார்கள். அதனால் நீதித்துறை பிரதிநிதித்துவத்தில் பெண்கள் சமநிலைக்கு வருவதற்கு சில காலம் எடுக்கும்.
நான் சட்டக் கல்லூரிக்கு சென்ற போது முதலாம் ஆண்டில் என் வகுப்பறையில் ஐந்து பெண்களே இருந்தனர். இரண்டாம் ஆண்டில் அது இரண்டு அல்லது மூன்றாக குறைந்து விட்டது. இன்று சட்டக் கல்லூரியில் பயிலுபவர்களில் பெண்களின் சதவீதம் நன்கு உயர்ந்துள்ளது” என பாத்திமா பீவி பதில் அளித்து இருந்தார்.
பாத்திமா பீவி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதன் மூலம் ஆசிய கண்டத்தில், ஒரு நாட்டில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையையும் பெற்றார். அவர் நீதிமன்றத்தில் மரியாடையுடனும், சமத்துவமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், வழக்கில் ஒரு முடிவை எடுக்கும் போது அதுகுறித்த பின்னணிகளை முழுமையாக அறிந்து வைத்திருப்பார் எனவும் கூறப்படுகிறது.
அவர் 1992இல் நீதித்துறையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், 1997ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவால் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் ஆளுநராக இருந்த போது ராஜ்பவனில் தனிமையிலேயே வசித்ததாக கூறப்படுகிறது.
அவர் தமிழக ஆளுநராக பணியாற்றிய காலத்தில் ஜெயலலிதாவை முதலமைச்சராக ஆட்சி அமைக்க ஏற்றுக்கொண்டது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கருணாநிதியின் பரிந்துரையால் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட இவர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது ஜெயலலிதாவிற்கு ஆதரவாக இருந்ததாக சர்ச்சை எழுந்தது.
மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடுவது குறித்து ஆளுநராக இருந்த பாத்திமா பீவி மேலிடத்திற்கு முறையாக தெரிவிக்கவில்லை எனக்கூறி ஆளுநர் பாத்திமா பீவி திரும்பப் பெறப்பட்டார். பின்னர், பாத்திமா பீவி அவரது ஓய்வுக் காலத்தை அவரது பூர்விக இடத்தில் அமைதியுடன் கழித்தி வந்தார். இந்நிலையில் அவரது 96 வயதில் பாத்திமா பீவி காலமானார். பாத்திமா பீவி மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்!