தமிழ்நாட்டில் முதன்முறையாக சாலை விபத்தினாலோ திடீரென ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர் கருவி (AED/Defibrillator Fast Response Kit) தாம்பரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலில் தமிழ்நாட்டில் டிஃபிபிரிலேட்டர் இயந்திரம் சாலையில் பொருத்தப்பட்டு இருப்பது வரவேற்கக்கூடிய ஒன்று. இந்த டிஃபிபிரிலேட்டர் இயந்திரத்தை பயன்படுத்தும் விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டும் என அரசு மருத்துவமனை மருத்துவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை பழைய மாமல்லபுரம் சாலை சோழிங்கநல்லூர் சிக்னல் பகுதியில் தாம்பரம் மாநகர காவல்துறையும், அலர்ட் என்ற தனியார் தொண்டு நிறுவனமும் (Alert NGO, Chennai) இணைந்து சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு உயிர்பிழைக்க போராடுபவர்களுக்கும் சாலையில் திடீரென 'மாரடைப்பு' ஏற்பட்டு மயக்க நிலையில் இருப்பவர்களை காப்பாற்றும் வகையில், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக 'தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர்' எனும் கருவி சோழிங்கநல்லூர் சிக்னல் செம்மஞ்சேரி காவல் நிலையம் அருகில் கடந்த ஜன.11ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த கருவி மூலம் சாலை விபத்துகளிலோ (அ) மாரடைப்பினாலோ மூச்சு விட அவதிப்படுவோருக்கு முதலுதவி செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் எனவும், இந்த கருவி விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் மட்டுமே இதுவரை இருந்து வருகிறது என்றும்; தமிழ்நாட்டில் முதல்முறையாக சாலையில் அமைக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும் எனவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
80% உயிர்பிழைக்க வாய்ப்பு: மேலும், ’இக்கருவி வெளிநாடுகளில் 15 கிலோ மீட்டருக்கு ஒன்று இருக்கும். இந்த கருவி அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து தமிழ்நாடு நெடுஞ்சாலைகளில் காவல் துறையுடன் இணைந்து இந்தக் கருவியை அமைப்பதற்கான பணியில் ஈடுபடப்போவதாக’ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நீலகண்டன் தெரிவித்தார். விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு உயிர்பிழைக்க 30 சதவீதம் தான் வாய்ப்புள்ளதாகவும்; இந்நிலையில் இந்த கருவி மூலம் சிகிச்சை அளித்தால் 80 சதவீதம் வரை உயிர்ப்பிழைக்க முடியும் எனவும் கூறுகின்றனர்.
இதயத்துடிப்பை சீராக்கும்: தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர் கருவி எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் கனிமொழி நமது 'ஈடிவி பாரத் தமிழ்நாடு' ஊடகத்திடம் கூறுகையில், 'தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர் கருவி, சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற பயன்படுகிறது. இந்தக் கருவியினை சாலையில் காவல் துறையின் தனியார் தொண்டு அமைப்பும் இணைந்து அமைத்துள்ளது. இந்தக் கருவி மூலம் தானாகவே விபத்தில் சிக்கி சுய நினைவு இல்லாமல் இருக்கும் நபரின் மார்பின் மீது வைத்து மின்சாரம் பாய்ச்சும் போது அவர்களுடைய இதயத்துடிப்பினை சீராக்க முடியும்.
இக்கருவியின் சிறப்பு என்னவென்றால், இந்த கருவி மிகவும் சின்னதாகவும் கைக்கு அடக்கமாகவும், பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய வகையிலும் இருக்கும். இதில் எவ்வாறு அந்த இயந்திரத்தை எடுத்து பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து குறிப்புகள் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும்.
அவசர நிலையில் உயிரைக் காக்கும்: இது விமான நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் வைக்கப்படும்போது அங்கு இருக்கும் முன் அனுபவம் இல்லாத பொதுமக்கள், யார் வேண்டுமானாலும் திடீரென விபத்துக்குள்ளாகும் நபருக்கு, இதன் மூலம் முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்ற முடியும். டிஃபிபிரிலேட்டர் போன்ற உயிர்காக்கும் கருவிகளை பொது இடங்களில் வைப்பது வரவேற்கக்கூடிய ஒன்று. அவசர நிலைக்கு மருத்துவக் குழு சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதனை செய்யும் அந்த நேரத்தை, இந்த இயந்திரம் மூலம் குறைக்க முடியும்.
கையடக்க கருவியானாலும் உயிரை மீட்கும் கருவி: இந்த டிஃபிபிரிலேட்டர் இயந்திரத்தை பயன்படுத்தும் விழிப்புணர்வு அனைவருக்கும் இருந்தால் அவசர காலத்திற்குள் உயிர்ப்பிழைக்க வைக்கும் 'கோல்டன்' நேரமாக இருக்கும். ஒருவர் விபத்திற்கு உள்ளாகி எவ்வளவு விரைவில் இந்த மருத்துவ உதவி கிடைக்கிறதோ.., அவ்வளவு விரைவில் அவரை காப்பாற்ற ஏதுவாக இருக்கும்’ இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: சாலை விபத்தில் மாரடைப்பா? உயிரிழப்பை தடுக்க புதிய கருவி அறிமுகம்!