தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தக் கலந்தாய்வு காலை 8 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, கலந்தாய்வு நடைபெறும் ஜவர்கலால் நேரு விளையாட்டு அரங்குக்கு மாணவர்கள் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து மாணவர்களுக்கு வருகை பதிவேடு சரிபார்க்கப்பட்டது.
அப்போது, முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் உள்பட தரவரிசை பட்டியலில் முதல் 15 இடங்களை பிடித்த மாணவர்கள் யாரும் கலந்தாய்வுக்கு வரவில்லை. காலை 9 மணிக்கு கலந்தாய்வுக்காக தரவரிசை பட்டியலில் உள்ள முதல் 50 இடங்களைப் பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தது. இதில், 35 மாணவர்கள் பங்கேற்கவில்லை, 16ஆவது இடம் பிடித்த மாணவர் கலந்தாய்வில் பங்கேற்க வந்திருந்தார்.
முதல் முறையாக மருத்துவ படிப்பில் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடம் பெற்ற மாணவர்கள் ஒருவர் கூட கலந்தாய்வில் பங்கேற்காதது கல்வி அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு, இருப்பிடச் சான்றிதழை தவறாக அளித்து மாணவர்கள் சிலர் முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழ் தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன. சந்தேகப்படும் மாணவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு தனியாக இருப்பிடச் சான்று சரிபார்ப்பு குழுவால் அதற்கான பதிவேடு பராமரிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக் குழு செயலாளர் செல்வராஜன் கூறியதாவது:-
இந்த ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வு 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.
முதல்நாளில் 361 மாணவர்களை அழைத்துள்ளோம். இதில் எம்பிபிஎஸ் படிப்பில் 2 ஆயிரத்து 747, தனியார் மற்றும் அரசு கல்லூரி ஒதுக்கீட்டில் ஆயிரத்து 61 என 3 ஆயிரத்து 848 இடங்களும், பிடிஎஸ் அரசுக் கல்லூரியில் 151, தனியார் கல்லூரியில் 985 இடங்கள் என ஆயிரத்து 136 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
முதல் கட்டமாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. மாநில பாடத்திட்டத்தை தவிர, வேறு பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் ஆண்டுதோறும் தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகத்தில் தகுதி சான்றிதழ் பெற்று வர வேண்டும்.
இந்த ஆண்டும் அதுபோன்றுதான் சான்றிதழ் பெற்று வர கூறியுள்ளோம். மாணவர்களின் அனைத்து சான்றிதழ்களும் முழுமையாக சரிபார்க்கப்பட்ட பின்னரே கலந்தாய்வுக்கு அனுமதிக்கிறோம்.
இருப்பிட சான்று விவரங்களை சரிபார்க்க குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு சரிபார்த்த பின்னர் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: மருத்துவர்கள் பற்றாக்குறையுடன் மதுரை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் - ஆர்டிஐ-யில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்