சென்னை தி.நகர் விஜயராகவா சாலையில் சேகர் ரெட்டிக்கு சொந்தமான நான்கு மாடி கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடத்தில் உள்ள நான்காவது தளத்தில் ஜே.எஸ்.ஆர் இன்ப்ரா என்ற நிறுவனம் இயங்கி வருகின்றது.
இந்நிலையில் இந்த நிறுவனத்திலிருந்து இன்று காலை சுமார் 8.26 மணியளவில் திடீரென்று தீ ஏற்பட்டு கரும்புகை வெளியேறியுள்ளது. பின்னர் அந்த தளம் முழுவதும் தீ பரவத் தொடங்கியது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவலாளி மற்றும் பொதுமக்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின் அடிப்படையில் சென்னை தேனாம்பேட்டை, எழும்பூர், அசோக் நகர் ஆகிய இடங்களிலிருந்து ஐந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஒரு ஸ்கை லிப்ட் வாகனம் உள்ளிட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல மாவட்ட தீயணைப்பு அலுவலர் சையது முகமது ஷா, ‘தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், முற்றிலும் தீயை அணைத்துவிட்டனர்.
இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்துள்ளது. விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.
இதையும் படிங்க: திருப்பதி தேவஸ்தான குழுவில் மீண்டும் இடம் பெற்றார் சேகர் ரெட்டி...!