சென்னை: திருவல்லிக்கேணி ஜாம் பஜார் பகுதியில் உள்ள தேவராஜன் தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர்கள் அப்துல் ரஹீம் (58), அவரது மனைவி பாத்திமா (52) அவரது மகன் நஹீத்(22). இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (ஜூலை.16) தீவிபத்து ஏற்பட்ட நிலையில், விபத்தில் அப்துல் ரஹீம், பாத்திமா, நஹீத் ஆகிய மூவரும் சிக்கினர்.
இதையடுத்து, இவர்களில் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயில் சிக்கியவர்களை மீட்க முயன்றுள்ளனர். அதே நேரத்தில் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், தகவல் அறிந்த அங்கு வந்த ஜாம்பஜார் காவல் துறையினர், தீ விபத்து நடந்தது குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு ஏற்பட்டு தீயானது படுக்கை அறையில் தூங்கி கொண்டிருந்த மூவர் மீதும் பரவியுள்ளது தெரியவந்துள்ளது. இருப்பினும் தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: கண்காணிப்பு பணிகள் தீவிரம்