சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரசால் உலகம் முழுவதும் உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் மருந்து கண்டறியப்படவில்லை என்பதால், அதனைப் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நோய்த் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து மாநிலங்களும் முடக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிலும் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை 42 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த வைரஸ் மக்களிடையே பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்கள் மூடப்பட்டது. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய இளம் வழக்கறிஞர்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்களுக்காக மாதம் 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் முதலமைச்சர் பழனிசாமிக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், “தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முழுநேர வழக்கறிஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் வைத்த கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலித்து தமிழ்நாட்டிற்கு பணியாற்றும் இளம் மற்றும் பெண் வழக்கறிஞர்களுக்கு நிதி உதவி வழங்க உத்தரவிடவேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி!