சென்னை: பிரபலத் திரைப்பட நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று (டிச.28) காலை 6.10 மணியளவில் காலமானார். தொண்டர்கள், பிரபலங்கள், மற்றும் பொது அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் இன்று சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து திரைப்பிரபலங்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து மத்திய அரசின் சார்பில் விஜயகாந்த் உடலுக்கு மலர் வளையம் வைத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இறுதி மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த சம்பவத்தைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். பிரதமர் மோடி கேப்டனின் இறப்பு செய்தி கேட்டு, நான் பதிவிடும் முன்பே என்னை இந்த இறுதிச்சடங்கில் பங்கேற்று அவரின் குடும்பத்தினருக்கு இந்த துயரச் சூழலில் உடன் இருக்கும்படி அறிவுறுத்தினார். பிரதமர் மோடியின் சார்பாக எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த துக்கத்தை எடுத்துச் சொல்லக்கூட என்னிடம் வார்த்தைகள் இல்லை. விஜயகாந்த் இலகிய மனம் படைத்தவர். அரசியலைக் கடந்து இரக்கக் குணம் படைத்த கேப்டன் விஜயகாந்த் இன்று நம்முடன் இல்லை என்பது வேதனை அளிக்கிறது. தன்னையும் தன் நிறுவனத்தையும் தேடி வருபவர்களுக்கு உணவளித்து, அவர் செய்த உதவி மற்றும் அவரின் நற்குணம் போன்றவற்றை நாம் எடுத்துச் சொல்வதற்கான அவசியமில்லாத அளவிற்கு இன்று ஆயிரக்கணக்கான அவரது தொண்டர்கள் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசியல் களம் மற்றும் தமிழ்நாடு மக்களுக்கு தன் பணத்தால் உதவிக்கரம் நீட்டிய ஒரு நல்ல தலைவனை இழந்து வாடுகிறது. கேப்டன் விஜயகாந்தின் இறப்பு தாங்காமல் வாடித் தவிக்கும் அவரது மனைவி பிரேமலதா, மகன்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார். அப்போது அவருடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநிலச் செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், விஜயகாந்தின் உடலுக்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோரிடம் அவரது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: மறைந்த விஜயகாந்த் உடலிற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் அஞ்சலி!