சென்னை: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான ‘ஐ’ திரைப்படத்தின் புதுச்சேரி விநியோக உரிமையை ஸ்ரீ விஜயலட்சுமி ஃப்லிம்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. இந்த நிலையில், ஐ படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்தது.
இதனை எதிர்த்து ஸ்ரீ விஜயலட்சுமி ஃப்லிம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஐ என்பது தமிழ் வார்த்தை இல்லை என்பதால் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
தமிழில் ஐ என்பது வியப்பை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு அர்த்தம் உள்ளதால் கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டுமென்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
படத்தின் தலைப்பை ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழு, ஐ என்கிற பட தலைப்பு தமிழில் வைத்தாக கருதி வரிவிலக்கு அளிக்க வேண்டியதில்லை என அறிக்கை அளித்ததால், கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிக்கவில்லை என புதுச்சேரி அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதி, தமிழில் பெயர் வைப்பதை ஊக்குவிக்கும் வகையில், அரசு சலுகையாக கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிப்பதாகவும், அந்த சலுகையை உரிமையாக கோர முடியாது என்றும் தெரிவித்தார். நிபந்தனைகள் பூர்த்தியாகி இருந்தால் மட்டுமே அரசு வரி விலக்கு அளிக்கும் எனவும், கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என்பது சட்டம் எனவும் கூறினார்.
மேலும், பெயரில் தமிழ் சொல் பயன்படுத்தப்பட்டது என்ற காரணத்திற்காகவே கேளிக்கை வரி விலக்கு சலுகையை உரிமையாக கோர முடியாது என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஆரம்ப கட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. பொதுமக்கள் அந்த படங்களைப் பார்க்க ஊக்குவிக்கும் வகையில், டிக்கெட் விலையை குறைக்கும் நோக்கத்திலேயே வரி விலக்கு அளிக்கப்பட்டது.
கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கும் சலுகை கொண்டு வரப்பட்டது. இந்த வரி விலக்கால் பார்வையாளர்களுக்கு எந்த வித பயனும் இல்லை என்றும், தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக உள்ளது என்றும் விமர்சிக்கப்பட்டது. இந்த சலுகையால் டிக்கெட் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
பின்னர் கடந்த 2011ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில், இந்த கேளிக்கை வரி விலக்கு அளிக்கும் சலுகையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. பின்னர் 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பு திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு திரைத்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கேளிக்கை வரி 10 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இதையும் படிங்க: 22 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த சிம்ரன், லைலா கூட்டணி!