மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வு ஒன்றிய அரசு மூலம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு நாடு முழுவதும் அதிருப்தி நிலவினாலும் தமிழ்நாடு இதிலிருந்து விலக்கு வேண்டும் என தீவிரமாக போராடிவருகிறது.
குறிப்பாக 2017ஆம் ஆண்டு அனிதாவில் தொடங்கி நேற்று முன் தினம் (செப் 11) தனுஷ்வரை மொத்தம் 14 மாணவ, மாணவிகளை நீட் காவு வாங்கியுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திமுக தலைமையிலான அரசு நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு வலியுறுத்திவருகிறது.
அதேபோல், ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்வதற்கும், கருத்து கேட்பதற்கும் குழு ஒன்றையும் அமைத்தது. அந்தக் குழுவும் நீட் தேர்வால தமிழ்நாட்டு பாதிப்பு என அறிக்கை தாக்கல் செய்தது.
நீட் தேர்வை ரத்து செய்வோம் என தேர்தலில் வாக்குறுதி கொடுத்து ஆட்சி வந்த திமுக நிச்சயம் நீட்டிலிருந்து தமிழ்நாட்டை விடுவிக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மசோதா தாக்கலுக்கு முன்னதாக திமுக - அதிமுக எம்.எல்.ஏக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.