சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம், பேராசிரியர்களுக்கான ஊதியம் ஆகியவற்றை நிர்ணயம் செய்வதற்கான பரிந்துரை அறிக்கையை அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி கழகம் வெளியிட்டுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்வி நிறுவனங்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யவும், ஆசிரியர்களுக்கு ஊதியத்தை நிர்ணயம் செய்யவும் மும்பை NITIE இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் கட்டண நிர்ணயம் செய்வதற்கான பரிந்துரையை, அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்கழகம் (AICTE) வெளியிட்டுள்ளது.
இன்ஜினியரிங் கட்டணப் பரிந்துரை உயர்வு: அதன்படி இந்தியா முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் 79ஆயிரத்து 600 ரூபாய் எனவும், அதிகபட்ச கட்டணம் 1 லட்சத்து 89ஆயிரத்து 800 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறைந்தபட்ச கட்டணமாக 55ஆயிரம் ரூபாயும், அதிகபட்ச கட்டணமாக 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயுமாக இருந்த நிலையில் கட்டணம் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதுகலைப் பொறியியல் பட்டம் படிக்க ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக 1 லட்சத்து 41ஆயிரத்து 200 ரூபாயாகவும், அதிகபட்சமாக 3 லட்சத்து 04ஆயிரம் ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு, தமிழ்நாட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் கட்டணப் பரிந்துரை உயர்வு: பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு 67ஆயிரத்து 900 ரூபாயாகவும், அதிகபட்சமாக 1 லட்சத்து 40ஆயிரத்து 900 ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்பிற்கான கட்டணப் பரிந்துரை: தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் குறைந்தபட்ச கட்டணம் மற்றும் அதிகபட்ச கட்டணத்துக்குள் தங்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்துகொள்ளலாம். 3 ஆண்டு எம்சிஏ படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.88,500மும்; அதிகபட்சமாக 1 லட்சத்து 94ஆயிரத்து 100 என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டு எம்பிஏ படிப்புக்கு குறைந்தபட்சமாக 85ஆயிரம் ரூபாயாகவும்; அதிகபட்சமாக 1,95,200 என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் 7ஆவது சம்பள கமிஷன் வரையறுத்துள்ள ஊதியத்தை வழங்கிட வேண்டும் எனவும்; அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது. உதவிப் பேராசிரியர்களுக்கு மாதம் 1 லட்சத்து 37ஆயிரத்து 189 ரூபாய் எனவும்; பேராசிரியர்களுக்கு 2 லட்சத்து 60ஆயிரத்து 379 என்றும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி கட்டணத்தை குறைக்க கூடாது எனவும்; மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பின், கல்வித் தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும் எனவும் ஏஐசிடிஇ பரிந்துரை செய்துள்ளது.
இதையும் படிங்க: தாமஸ் கோப்பையினை வென்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!