சென்னை : காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்துறை அலுவலகத்தில் பணியாற்றிய மாற்றுத்திறனாளி ஊழியர் சரண்யா, இயற்கை உபாதையை கழிக்க அருகில் உள்ள வீட்டிற்கு சென்றபோது, அங்கிருந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த நிகழ்வை மேற்கோள்காட்டி, சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் கற்பகம் என்பவர் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்திருந்தார்.
அம்மனுவில், “அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வகை செய்யும் சட்டம் 1995 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட போதும், கடந்த 25 ஆண்டுகளாக காகித அளவிலேயே இருக்கிறது.அதேபோல, அனைத்து அரசு அலுவலகங்களிலும் கழிவறை, குடிநீர் வசதிகள் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்கப்பட வேண்டும். கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சரண்யாவுக்கு இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை. அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணையானது, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வின் முன்பாக இன்று (பிப்.26) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம்,“தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா ? மத்திய அரசு வழிகாட்டுகல்களை பின்பற்றி மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகளுடன் தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகக் கட்டடங்கள் குறித்து வரும் ஜூன் 14ஆம் தேதிக்குள் மாநில அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.
இதையும் படிங்க : கொண்ட கொள்கையில் நேர்மையும் துணிவும் கொண்டவர் தா பா - சத்யராஜ் உருக்கம்