மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் ‘பேபிபுளூ’ எனப்படும் வைரஸ் காய்ச்சலுக்கான ‘பேவிபிரவிர்’ என்ற மாத்திரையை தயாரிக்கிறது. இந்த மாத்திரையை கரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு அளித்ததில் பலன் கிடைத்துள்ளது.
குறிப்பாக, கரோனா வைரசின் ஆரம்ப நிலை மற்றும் அதற்கு அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு பேவிபிரவிர் மாத்திரை மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பேபிபுளூ காய்ச்சலுக்கு பலன் தரும் பேவிபிரவிர் மாத்திரைக்கு தற்போது இந்திய மருந்து கட்டுப்பாட்டுக் கழகம் அனுமதி அளித்துள்ளது. மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாத்திரை வழங்கப்படும்.
ஒரு மாத்திரை விலை ரூ.103 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நாளன்று 1,800 எம்ஜி திறன் கொண்ட மாத்திரைகள் இரண்டு வேளை சாப்பிட வேண்டும். அதன்பின், இரண்டாம் நாளில் இருந்து 800 எம்ஜி மாத்திரைகளை தினசரி இரண்டு என்ற வீதத்தில் 14 நாள்களுக்கு சாப்பிட வேண்டும்.
தமிழ்நாட்டில் பேவிபிரவிர் மாத்திரை 50 விநியோகஸ்தர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு இனி இந்த மருந்து, மருத்துவர்களின் பரிந்துரையின் படி வழங்கப்படுமென மருந்து விநியோகஸ்தர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.