சென்னை பாரிமுனை அங்கப்ப நாயக்கன் தெருவில் நண்பர்களுடன் வசித்து வந்தவர் காயல்பட்டினத்தைச் சேர்ந்த அபு. இவர் ஹாங்காங் ஹவாலா தரகர் ஆவார். கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி அபு வீட்டில் இல்லாத போது முஹம்மது ரிஸ்வான் என்ற நண்பர் மட்டும் தனியாக இருக்கையில், மர்ம கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து, ரிஸ்வானை கட்டிப்போட்டு ரூ.80 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஹவாலா பணம் என்பதால் காவல் துறையினரிடம் ரிஸ்வான் புகார் அளிக்கவில்லை. ஆனால் வடக்கு கடற்கரை தனிப்படை காவல் துறையினருக்கு ஹவாலா தரகர் அபு வீட்டில் கொள்ளைச் சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து தானாக முன்வந்து விசாரணை நடத்திய காவல் துறையினர், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கணேஷ், ரஞ்சித், அஜித், பிரகாஷ், பாலாஜி, ப்ரவீன், யஸ்வந்த், சதீஷ் ஆகிய எட்டு பேருக்கு தொடர்பு இருப்பதையும் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சிசிடிவி காட்சிகள், செல்ஃபோன் சிக்னல் ஆகியவற்றை வைத்து பாலாஜி, பிரகாஷ், அஜித், ரஞ்சித், சதீஷ் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். இவர்களை விசாரணை செய்ததில் கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது ரஃபிக் என்ற கள்ள நோட்டு கும்பல் தலைவன் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காவலர்கள் ரஃபீக்கை கைது செய்துள்ளனர். பின்னர் ரஃபீக் மீது சென்னையில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. அதில் கள்ளநோட்டு கும்பலின் தலைவனான ரஃபீக், ஆயுதக் கடத்தல், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளியுடன் சேர்ந்து தீவிரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியதாக தேசிய புலனாய்வு அமைப்பின் வழக்கு என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
பின்னர் கணேஷ் என்ற நபர் மூலம் கொள்ளையை திட்டமிட்டு அரங்கேற்றியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ரஃபீக்கின் செல்ஃபோனை ஆய்வு செய்த போது கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஜாபர் என்பவரிடம் பேசியது தெரிய வந்துள்ளது.
விசாரணையில் ஹவாலா தரகரும், ஜாபரும் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஜாபர் மூலமாக தகவல் கிடைத்து ரஃபீக் கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது. தலைமறைவாகி இருக்கும் ஜாபரை கைது செய்வதற்கு, அவரது நண்பன் கார் ஓட்டுநர் ரகுராஜ் என்பவரை காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
ஜாபர் ரகுராஜூக்கு 10 லட்சம் பணத்தை முன் ஜாமீன் எடுக்க அனுப்பியுள்ளதை அடிப்படையாக வைத்து ஜாபர் எங்கே இருக்கிறார் என காவல் துறையினர் விசாரணை செய்தனர். அப்போது திருவல்லிக்கேணியில் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலிசார் ஜாபர், கணேஷ் ஆகியோரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.