கேரள மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ்(32). இவர் கேரளாவில் உள்ள நகைக் கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகின்றார்.
இவரது கடை உரிமையாளர் கூறியதன் பேரில் 30 சவரன் பழைய நகைகளை உருக்கி புதிய நகை செய்ய வேண்டி மனோஜ் சென்னை என்.எஸ் .சி போஸ் சாலையில் உள்ள நகை பட்டறைக்கு வந்துள்ளார்.
நேற்று (நவம்பர் 30) மாலை மனோஜ் 30 சவரன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தை தனது பையில் வைத்து கொண்டு என்.எஸ்.சி போஸ் சாலையில் நடந்து சென்ற போது பைக்கில் வந்த இரண்டு பேர் மனோஜை வழிமறித்து, நாங்கள் போலீஸ் என்றும் நீ ஹவாலா பணம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர்.
பின்னர் மனோஜ் கையில் இருந்த பையை பறித்து கொண்டு யானைகவுனி காவல் நிலையத்தில் வந்து பெற்று கொள்ளுமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். உடனே மனோஜ் யானைகவுனி காவல் நிலையத்தில் சென்று இதுகுறித்து விசாரித்த போது வந்த நபர்கள் போலி போலீஸ் என தெரியவந்தது.
போலீஸ் போல் நடித்து 30 சவரன் நகை, 2 லட்ச ரூபாய் பறித்து சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனோஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து வழிபறி கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
இதே போல் சென்னை மின்ட் தெருவில் வெள்ளி நகை பட்டறை நடத்தி வரும் மகேந்திரனிடம் இதே கும்பல் போலீஸ் போல் நடித்து 1 கிலோ வெள்ளியை பறித்து சென்றுள்ளனர்.