சென்னை மெரினாவில் நேற்று இரவு காமராஜர் சாலையில் உள்ள நேதாஜி சிலை பின்புறம் உள்ள கடற்கரையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தனது தோழியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் தன்னை போலீஸ் என அடையாளப்படுத்திக்கொண்டு, அந்த ஜோடியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு அந்த நபர் பணம் தர மறுத்ததால், போலீஸ் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட நபர் அவரின் கன்னத்தில் அறைந்துவிட்டு தப்பியோட முயன்றுள்ளார்.
உடனே அவர்கள் இருவரும் கூச்சலிட, அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக அங்கு வந்து போலீஸ் என்று கூறிய நபரைப் பிடித்து, மெரினா காவல் உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் கும்பகோனத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்து மெரினா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.