சென்னை: அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் மின்வாரிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் துறை அலுவலகம் உள்ளது. இங்கு செல்வராணி என்பவர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் செல்வராணியை செல்போனில் தொடர்பு கொண்ட சுபாஷ் என்ற நபர், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், உங்களது விசாரணை எல்லாம் ஒருதலைப் பட்சமாக உள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல், நான் சொல்லும் ஒரு பெண் அதிகாரி மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உங்களைப் பற்றி அவதூறாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியிடுவேன் எனவும் செல்வராணியை மிரட்டும் விதமாகப் பேசியுள்ளார்.
எனவே இது தொடர்பாக செல்வராணி அளித்த புகாரின் பேரில் சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினர், போனில் தொடர்பு கொண்ட சுபாஷ் மீது இந்தியத் தண்டனைச் சட்ட பிரிவுகள் 353 அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், 506 (1) மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மேலும் இதுதொடர்பான விசாரணையில், சுபாஷ் என்பவர் கடந்த ஆண்டு மதுரவாயல் காவல் நிலையத்தில் தன் கார் மீது நான்கு பேர் மோதி விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் கூறி தன்னை ஐஏஎஸ் அதிகாரி என தெரிவித்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் வைத்திருந்த அடையாள அட்டையில் ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளர் என குறிப்பிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், போலியாக ஐஏஎஸ் அதிகாரி என கூறி பல்வேறு ஏமாற்று வேலைகளில் சுபாஷ் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், சுபாஷை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில்தான் சிறையிலிருந்து வெளியே வந்த சுபாஷ், மீண்டும் தன்னை ஐஏஎஸ் அதிகாரி என கூறி விஜிலென்ஸ் பெண் காவல் ஆய்வாளரை மிரட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.91 லட்சம் நூதன மோசடி