சென்னை: முன்னாள் டிஜிபியும், தாம்பரம் காவல் ஆணையராக இருந்தவர், ரவி. இவர் தமது புகைப்படத்தை வைத்து போலியான முகநூல் கணக்கு தொடங்கி மோசடி செய்வதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அப்புகாரில் போலி கணக்கில் ராணுவத்தில் பயன்படுத்திய தரமான பர்னிச்சர் பொருட்களை தான் வாங்கி உள்ளதாகவும், அதனை வாங்குமாறு பரிந்துரை செய்தது போல் சிலருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.
இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார்
கொடுத்துள்ளார். மேலும், இது குறித்து அவரது முகநூல் பக்கத்தில் இப்படி யாராவது தகவல் அனுப்பினால் அது போலி, உடனே காவல்துறையில் புகார் அளிக்கும்படி பதிவிட்டுள்ளார்.
இந்த மோசடி தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் டிஜிபி ரவி, ''முகநூல் பக்கத்தில் தனது பெயரில் போலியான கணக்கை சிலர் உருவாக்கி, ராணுவ அதிகாரி ஒருவரிடம் பர்னிச்சர் பொருட்களை வாங்கியதாகவும், பொருட்கள் நன்றாக இருப்பதாகவும், நீங்களும் வாங்கும் படி எனக்கூறி தனது நண்பர்கள் வட்டாரத்திற்கு சிலர் குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றனர்.
இந்த மோசடி தொடர்பாக சில நண்பர்கள் தன்னிடம் தெரிவித்ததால், உடனடியாக முகநூல் தலைமையிடம் மெட்டாவிற்கு இமெயில் அனுப்பி புகார் அனுப்பினேன். இதுபோன்ற போலியான கணக்குகளை உருவாக்கி பணத்தைப் பறிப்பது தான், சைபர் கிரிமினல்ஸ் உடைய நோக்கம்.
ஆகையால், இதுபோன்று முகநூலோ அல்லது வேறு ஒரு சமூக வலைதளங்களில் எனக்குப் பணம் தேவை என்று கூறும் செய்திவந்தால் அதை யாரும் நம்பக் கூடாது. இன்று பொதுமக்கள் இடையே இதுபோன்ற சைபர் குற்றங்கள் பெருகி வருகிறது. சைபர் குற்றம் என்பது காவல்துறைக்கு ஒரு பெரிய சவாலாகவே இருக்கிறது. முகநூல் பக்கத்தில் நமது மக்கள் தொகையை விட அதிக கணக்குகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆகையால், ஒரே நபர் பல கணக்கில் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதை கண்காணித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் வருங்காலங்களில் பெரிதான பாதிப்பாகிவிடும்.
அது மட்டுமல்லாமல் ஆபாசமான விசயங்களை அதில் பதிவிட்டு வருகின்றனர். அதையும் கண்காணித்து சரி செய்யாவிட்டால், இளைஞர்கள் கெடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பெண்களைக் கடத்தலில் ஈடுபட இந்த முகநூல் பக்கத்தை பயன்படுத்தி வருகிறார்கள். விபசாரம் செய்யும் தொழிலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். ஆகையால், இவைகளைத் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு பெரிய அளவிலான ஒரு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்கள் பெருமளவுக்கு பாதிப்புக்குள்ளாக்கப்படுவார்கள்.
மேலும், இது போன்ற சைபர் கிரைம் குற்றத்தை முகநூல் மற்றும் இணையதளம் மூலமாக ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அவர்கள் தங்களை காவல்துறை பிடிக்க முடியாது என்ற ஒரு சவாலோடு குற்றங்களை செய்து தலைமறைவாக இருக்கிறார்கள். இந்த சமூக வலைதளங்கள் என்பது இருபக்கம் கூர்மையுள்ளது. ஒரு பக்கம் நன்மையும், மறுபக்கம் தீமையும் உண்டு. ஆகையால், இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
இந்த சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து ஒரு விழிப்புணர்வு பாடங்களை குழந்தைகள் மத்தியில் பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும். தொண்டு நிறுவனங்கள், அரசாங்கம் இவர்கள் எல்லாம் இணைந்து இதைத் தடுக்க முன்வர வேண்டும். ஆகையால், தேசிய அளவில் அதிரடியான நடவடிக்கையை எடுத்தால் மட்டுமே இவைகளைத் தடுக்க முடியும் எனவும் உலக அளவிலேயே இப்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
நேரடியாக ஒரு தாக்குதலை நடத்துவதற்கு பதிலாக இப்பொழுது இணையதளங்கள் மூலமாக பல்வேறு வகையில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரசாங்கம் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காவல்துறையில் சட்டம் ஒழுங்குக்கு தனி காவல் நிலையம் இருப்பது போல் சைபர் குற்றத்திற்கும் ஒரு காவல் நிலையம் ஒவ்வொரு இடத்திலும் செயல்பட வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்ட அமைச்சர் பொன்முடி!