தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் பொறியியல் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் விசாரிக்க அருளரசு தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் தலைவர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பொறியியல் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் வந்தால் மாணவர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தை அழைத்து விசாரணை நடத்துவோம்.
விசாரணையில் கல்லூரி நிர்வாகம் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூல் செய்தது உண்மை என நிரூபிக்கப்பட்டால் அந்தக் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திற்கு பரிந்துரை செய்வோம்.
பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் தேசிய தரச்சான்றிதழ் பெற்ற படிப்பிற்கு 55 ஆயிரம் ரூபாய், தரச்சான்று பெறாத படிப்பிற்கு 50 ஆயிரம், மேலாண்மை ஒதுக்கீட்டில் தரச்சான்று பெற்ற படிப்பிற்கு 87 ஆயிரமும், தரச்சான்று பெறாத படிப்பிற்கு 85 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில் கல்வி கட்டணம், மாணவர் சேர்க்கை கட்டணம், சிறப்பு கட்டணம், நூலகம் கம்ப்யூட்டர், இணையதள கட்டணம் ,விளையாட்டு கட்டணம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி கட்டணம் உள்ளிட்டவை அடங்கும்.
இவற்றில் முக்கியமாக விடுதி கட்டணம் மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் அடங்காது.மாணவர்கள் tncapitation@gmail.com என்ற இ மெயிலிலும்,044 22351018 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என கூறினார்.